Published : 20 Aug 2023 08:50 AM
Last Updated : 20 Aug 2023 08:50 AM

அதிமுக மாநாடு எதிரொலி: மதுரையில் திமுக உண்ணாவிரதம் ஆக.23-க்கு மாற்றம்

மதுரை: மதுரையில் அதிமுக மாநாடு நடக்கும் இன்றே திமுக உண்ணாவிரதமும் நடக்கவிருந்தது. இந்நிலையில், திடீரென ஆக.23-ம் தேதிக்கு உண்ணாவிரதம் மாற்றப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்க கட்சித் தலைமை அறிவுறுத்தலின்பேரில், இந்த மாற்றம் நடந்துள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்தும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆக.20-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இளைஞரணி, மருத்துவ அணி, மாணவரணி சார்பில் நடக்கும் இந்த உண்ணாவிரதம் மதுரை பழங்கா நத்தம் நடராஜ் திரையரங்கு அருகே நடக்கும் என அறிவிக்கப்பட்டது. முதலில் மாநகர் திமுக சார்பில் மட்டும் நடப்பதாக இருந்தது. அதே நாளில் அதிமுக மாநாடும் நடப்பதால், அதிக தொண்டர்களை திரட்டு பொருட்டு புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டத்தினர் இணைந்து ஒரே இடத்தில் உண்ணாவிரதம் நடக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் புறநகரிலிருந்து திமுகவினரின் வாகனங்கள் உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்கு வர வேண்டியிருந்தது. அதே நேரம் அதிமுக மாநாட்டுக்குச் செல்லும் வாகனங்களும் ஏராளமாக வரும். இதனால் மேலூர் சாலை, திருமங்கலம் சாலை, உசிலம்பட்டி சாலை என பல்வேறு இடங்களில் இரு கட்சியினர் வாகனங்களும் சந்திக்கும் சூழல் உருவாகும். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: மதுரையில் எதிர்க்கட்சி மாநாடு நடக்கும் நிலையில், அன்றே திமுக உண்ணாவிரதம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் எழலாம். இந்த பழி திமுக மீது விழுவதை தவி்ர்க்க நாங்களே முன்னெச்சரிக்கையாக உண்ணாவிரத தேதியை மாற்றிவிட்டோம். இது குறித்து கட்சி தலைமையும் அறிவுறுத்தி இருந்தது’ என்றனர்.

இதற்கிடையே ஆக.23-ம் தேதி உண்ணாவிரதம் மதுரை பழங்காநத்தத்தில் திட்டமிட்டபடி 3 மாவட்டத்தினர் இணைந்து நடத்துகிறோம் என மதுரை மாநகர் புறநகர் மாவட்ட இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணியினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையே உண்ணாவிரத போராட்டத்தில் பல ஆயிரம் பேரை திரட்டி நிகழ்ச்சியை நடத்த திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x