Published : 20 Aug 2023 07:37 AM
Last Updated : 20 Aug 2023 07:37 AM
திருவள்ளூர்: சென்னை - மாத்தூரில் டவர் ஃபேன் எரிந்ததால் உருகிய கொசுவிரட்டியால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள், மூதாட்டி என, 4 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி அருகே உள்ள மாத்தூர் எம்.எம்.டி.ஏ., குடியிருப்பு 3-வது பிரதான சாலை, 79-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் உடையார்(40). இவரது மனைவி செல்வி(32). இத்தம்பதிக்கு சந்தியா(10), பிரியா லட்சுமி(8) என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் உடையார், சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, விபத்தில் சிக்கி கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கவனித்துக் கொள்வதற்காக செல்வி, மருத்துவமனையில் தங்கியுள்ளார்.
இதனால், குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆம்பூரில் வசித்து வந்தஉடையாரின் தாயார் சந்தானலட்சுமி(67), கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்தானலட்சுமி, சந்தியா, பிரியாலட்சுமி மற்றும் செல்வியின் அண்ணன் மகள் பவித்ரா(7) ஆகிய 4 பேர் வீட்டில்ஒன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு, டவர் ஃபேனில் மின்கசிவு ஏற்பட்டு எரியத் தொடங்கியுள்ளது.
உருகிய கொசு விரட்டி: அந்த வெப்பத்தில், டவர் ஃபேன் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த பிளக் பாயிண்ட்டில் இருந்த திரவ கொசு விரட்டி உருகி கீழேஅட்டைப்பெட்டியில் விழுந்துள்ளது. இதில், சிறியதாக தீ விபத்து ஏற்பட்டு, வீடு முழுவதும் புகை மண்டலம் உருவானது.
புகை மண்டலம், கொசு விரட்டி உருகியதால் வெளியேறிய விஷவாயு ஆகியவற்றால் சந்தானலட்சுமி, சந்தியா, பிரியா லட்சுமி மற்றும் பவித்ரா ஆகிய 4 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் பவித்ராவின் தாய் வேலம்மாள், மகளை அழைத்துச் செல்ல உடையார் வீட்டுக்கு வந்துள்ளார். கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் புகைமூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினரின் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 4 பேரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தடயவியல் சோதனை: தகவலறிந்து விரைந்து வந்த ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், மணலி காவல் உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மாதவரம் பால் பண்ணை காவல் ஆய்வாளர் வேலுமணி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சம்பவம் குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்விபத்தை தடுப்பது எப்படி?: மின்விபத்தை தடுப்பது தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளர்கள் கூறியதாவது: டவர் ஃபேனில் பேரிங், காயில் போன்றவை பழையதாக இருக்கலாம். பேரிங்கில் ஏற்படும் வெப்பம் காயிலை எரிய வைத்திருக்கும். டவர் ஃபேனில் ஓரளவுக்கு மேல் சத்தம் வரும்போது பேரிங் போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும். தாங்களே காயிலை கட்டி (ரீவைண்டு) பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது அபாயகரமானது.
இதுமட்டுமின்றி இஎல்சிபி (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) என்னும் கருவியை பயன்படுத்தலாம். இதன்மூலம் மின் விபத்து நேரிடும்போது தானாகவே மின் விநியோகம் தடைபடும். இதை தனியார் எலக்ட்ரீஷியன்கள் மூலம் அமைத்துக் கொள்ள ரூ.500 வரைதான் செலவாகும். அதேபோல், விடிய விடிய கொசு மருந்து இயந்திரத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT