Last Updated : 25 Dec, 2017 08:33 AM

 

Published : 25 Dec 2017 08:33 AM
Last Updated : 25 Dec 2017 08:33 AM

மக்கள் அங்கீகரிக்கும் தலைவரே ஒரு கட்சியின் உண்மையான வாரிசு: அடையாளம் காட்டுகிறதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்?

கோபுரத்தில் அமர வைக்கப்பட்டு முடிசூட்டப்பட்ட தலைவர்கள் மக்கள் செல்வாக்கு இல்லாமல் பதவியிழந்த வரலாறு பல உண்டு. அதேபோன்று, மக்கள் செல்வாக்குடன் கோபுரத்துக்குச் சென்று பதவியில் அமர்ந்த தலைவர்கள் நீண்டகாலம் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதற்கும் பல உதாரணங்கள் உண்டு. எம்ஜிஆர் மறைவுக்குப்பின் அதிமுக-வின் அடுத்த வாரிசாக உரிமை கோரிய ஜெயலலிதாவுக்கு அப்போதைய தலைவர்கள் வழிவிடவில்லை. ஆனால், மக்களைச் சந்தித்து நிரூபித்த பின்பே அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

கடந்த 89-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 2 பிரிவாக பிரிந்து ஜானகி தலைமையில் ஒரு அணியாகவும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும் போட்டியிட்டபோது, திமுக ஆட்சியைப் பிடித்தது. பிரிந்த அதிமுக-வின் 2 அணிகளில் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றினார். ஜானகி இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்.

இருதரப்பும் பெற்ற வெற்றிகள் அவர்களில் யார் கட்சிக்கு தகுதியானவர் என்பதை அடையாளம் காட்டும் வகையில் அமைந்திருந்தது. ஜெயலலிதாவுக்கு கிடைத்த இந்த வெற்றிதான் அவர் அதிமுகவை கைப்பற்றி, அக்கட்சியை வழிநடத்தவும் எம்ஜிஆரின் அடுத்த வாரிசாகவும் அடையாளப்படுத்தி தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

ஜெயலலிதா ஒருமுறை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, ‘உங்களுக்குப் பின் அதிமுகவை வழிநடத்தும் வாரிசாக யாரை கருதுகிறீர்கள்’ என்பது. அதற்கு அவர் அளித்த பதில், ‘நான் ஏன் வாரிசை நியமிக்க வேண்டும். எம்ஜிஆர் என்னை வாரிசாக நியமித்துவிட்டுச் செல்லவில்லை. நான் என் தகுதியை நிரூபித்து கட்சித் தலைமையைப் பிடித்தேன். அதேபோன்று எனக்குப் பின்னர் யாருக்கு தகுதி இருக்கிறதோ, அவர் இந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை அடைவார்’ என்று பதிலளித்தார்.

அவர் குறிப்பிட்ட அந்த அடுத்த வாரிசு யார் என்ற குழப்பம், ஜெயலலிதா மறைந்த நாளில் இருந்து நீடித்து வந்தது. அடுத்த வாரிசு சசிகலாவா, ஓ.பன்னீர்செல்வமா, எடப்பாடி பழனிச்சாமியா, தினகரனா, ஜெ.தீபாவா என பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் கடைக்கண் பார்வையுடன் ஓ.பன்னீர்செல்வம் அந்த பட்டியலில் முதலிடத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாம் இடத்திலும் இருந்து வந்தனர்.

இந்த விஷயத்தில் அதிமுகவினரே சற்று குழப்பமடைந்த நிலையில் இருந்தனர். கட்சித் தொண்டர்களில் சிலர் அந்தப்பக்கம், சிலர் இந்தப் பக்கம் என்று தாவிய வண்ணம் இருந்தனர். ஆனால், உண்மையில் ஒரு தலைவர் மறைந்த பின்னர் அந்த இடத்துக்கு தகுதியானவரை முடிவு செய்யும் அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது. தேர்தல் வெற்றிகள் மூலம் மக்கள் அளிக்கும் அங்கீகாரத்தைப் பொறுத்துதான் அவரது கட்சித் தலைமைப் பதவியே நீடிக்கும். இதற்கு 1989-ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி சான்றாக அமைந்தது.

அந்த வகையில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் நடந்துள்ள முதல் தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இதில் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரையும் சின்னத்தையும் ஓரங்கட்டி தினகரன் பெற்றுள்ள வெற்றி அவரை அடுத்த வாரிசாக அடையாளம் காட்டி விட்டதா என்ற கேள்விக்கு ஓரளவுக்கு விடை கிடைத்துள்ளதாகவே கருத முடியும். அவரது தலைமையை ஆர்.கே.நகர் மக்கள் அங்கீகரித்துள்ளதாக இந்த வெற்றியை கருத முடியும். ஆனால், ஒரு பெரிய கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவரை முடிவு செய்யும் விஷயத்தில் ஒரு சிறு தொகுதியின் இடைத்தேர்தல் விடையாக கொள்ள முடியாது.

இன்னும் சில தேர்தல்களில் அவர் தனது தகுதியை திறமையை வெற்றிகள் மூலம் நிரூபித்த பின்பே, அதிமுகவின் அடுத்த வாரிசாக அவர் அங்கீகரிக்கப்படுவார் என நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x