Published : 05 Dec 2017 10:13 AM
Last Updated : 05 Dec 2017 10:13 AM
தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்தாலும், கட்டுக்கடங்காத வெள்ளத்தை தாங்கி 300 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கிறது குறுக்குத்துறை முருகன் கோயில்.
திருநெல்வேலி அருகே குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், தாமிரபரணியின் நடுவே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இக்கோயில் மூழ்குவதும் வாடிக்கை. அப்போது, 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் வருகிறது என நெல்லை மக்கள் புரிந்து கொள்வர்.
வெள்ளப்பெருக்கு காலங்களில் இக்கோயிலில் இருந்து உற்சவர், சப்பரங்கள், உண்டியல் போன்றவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று, கரையில் அமைந்துள்ள மேலக்கோயிலில் வைத்துவிடுவர். மூலவர் சிலை மட்டும் அப்படியே இருக்கும். வெள்ளம் வடிந்தபின் கோயிலை முழுமையாக சுத்தப்படுத்தி, உற்சவரை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வருவர்.
நுட்பமான கட்டமைப்பு
கடந்த 300 ஆண்டுகளாக எந்த வெள்ளத்தையும் தாங்கும் வகையில் இந்த கோயில் கம்பீரமாக நிற்கிறது. 1992-ல் புயல் மழையின்போது 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் கரைபுரண்டபோதும், இக்கோயிலின் மேல்தள ஓடுகள் மட்டுமே சேதமடைந்தன. வேறு பாதிப்புகள் ஏற்படவில்லை.
வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் கோயிலின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.
பொங்கி வரும் வெள்ளத்தை கிழித்து பிரிக்கும் வகையில், படகுகளின் முன்பகுதி கூர்முனையுடன் இருப்பதுபோல், இக்கோயிலின் மேற்கு பகுதி மதிற்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. வெள்ளம் மோதும்போது இந்த கூர்மையான சுவரில் பட்டு சிதறி ஓடிவிடும். கோயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
மண்டபத்தினுள் புகும் வெள்ளம் மறுபுறம் வெளியேறும் வகையில் கற்சுவரில் ஜன்னல் வடிவிலான திறப்புகள் காணப்படுகின்றன. இதுபோன்ற நுட்பமான கட்டுமானத்தால்தான் 300 ஆண்டுகளாக இக்கோயில் வெள்ளத்தை எதிர்கொண்டு வருகிறது.
17-ம் நூற்றாண்டுக்குப்பின் நாயக்கர் மன்னர் காலத்தில், திருநெல்வேலி பகுதியின் ஆளுநராக இருந்த வடமலைப்பிள்ளையன் காலத்தில்தான் இக்கோயில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
கோயிலின் சிறப்பு குறித்து அர்ச்சகர் எஸ்.ஆனந்தபட்டர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தாமிரபரணி பாயும் குறுக்குத்துறை பகுதியில் பாறைகள் அதிகமுண்டு. பாறையை குடைந்துதான் குறுக்குத்துறை முருகன் கோயில் மூலவர் சந்நிதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த வெள்ளத்திலும் மூலவர் சிலைக்கு பாதிப்பு ஏற்பட்டதில்லை. கோயிலின் மேற்கு பகுதி மதிற்சுவர் கூர்முனையுடன் எழுப்பப்பட்டிருப்பதால் வெள்ளத்தை அது எதிர்கொள்கிறது.
கோயிலின் ஸ்தூபி கல்லால் ஆனது என்பதால் எவ்வித சேதமும் ஏற்படுவதில்லை. இங்கு கோயிலை கட்டி சுவாமியை வைக்கவில்லை. சுவாமி சுயம்புவாக இருந்த இடத்தில் கோயிலை கட்டியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நுட்பமான இந்த கட்டுமானம் காலவெள்ளத்தையும் தாண்டி இக்கோயிலை கம்பீரமாக வைத்திருக்கும் என்பது திண்ணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT