Published : 01 Dec 2017 10:45 AM
Last Updated : 01 Dec 2017 10:45 AM
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நேற்று இரண்டாவது நாளாக குமரி மாவட்டம் இருளில் மூழ்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்வது வழக்கம்தான். ஆனால், ஒக்கி புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதை எப்போதும் போன்ற கனமழை என்றே மக்கள் சாதாரணமாக எடுத்துகொண்டனர். ஆனால், நேற்று காலை 7 மணியில் இருந்து காற்றின் வேகம் அதிகரித்தது. 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசிய காற்றால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தது.
20-க்கும் மேற்பட்டோர் காயம்
குமரி மாவட்டத்தில் புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத மரங்கள் அத்தனையும் வேரோடு சாய்ந்தன. திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை என அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் சாய்ந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந் தனர்.
குலசேகரம் சித்திரங்கோடு மற்றும் பிற பகுதிகளில் கார், பிற வாகனங்களின் மேல் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் விழுந்ததாலும், மின்கம்பிகள் விழுந்ததாலும் மின்தடை ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்செரிக்கையாக மாவட்டம் முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டது.
மேலும், குலைதள்ளிய பருவத்தில் நின்றிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் போயின. இதனால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். நேற்று, பகல் முழுவதும் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயங்கவில்லை.தொடரும் சூறைகாற்றால் மின்கம்பங்களில் சாய்ந்த மரங்களை மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ள முடியாமல் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் தவித்தனர்.
ரப்பர் மரங்கள்
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்தன. காற்றின் வேகத்தை பார்த்து அச்சமடைந்த மக்கள் வெளியே செல்வதை தவிர்த்தனர். நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. நாட்டுப்படகு, மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT