Last Updated : 19 Aug, 2023 09:35 PM

13  

Published : 19 Aug 2023 09:35 PM
Last Updated : 19 Aug 2023 09:35 PM

அரசியல் மிரட்டல்களுக்கு பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை - ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் குற்றச்சாட்டு

மதுரை: அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மதுரை கிருஷ்ணய்யர் அரங்கில் வழக்கறிஞர்கள் மத்தியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசினார்.

அப்போது ஹரிபரந்தாமன் பேசியதாவது: பிஎம்எல்ஏ சட்டம் ஒரு கருப்பு சட்டம். அந்தச் சட்டத்தில் போலீஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்பது குற்றவியல் நடைமுறைக்கு எதிரானது. போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் அதற்கான பணப்புழக்கத்தை தடுக்கும் நோக்கத்தில் பிஎம்எல்ஏ சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சட்டம் திருத்தப்பட்டு 28 சட்டங்கள் சேர்க்கப்பட்டு அவற்றின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கலாம் என மாற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மோடி அரசு திரும்ப கொண்டு வந்துள்ளது. தற்போது அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. எந்த நோக்கத்திற்காக பிஎம்எல்ஏ சட்டம் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு விரோதமாக சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிஎம்எல்ஏ சட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும். இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்கும் போது தண்டனை அடையும் முன்பு ஒவ்வொருவரும் அப்பாவி தான். அந்த அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும். நாட்டில் இருக்கமாட்டார், வெளிநாட்டிற்கு தப்பிவிடுவார் என நினைத்தால் ஜாமீன் மறுக்கலாம். மற்றபடி ஜாமீன் மறுப்பது சரியல்ல. அது தனி நபர் சுதந்திரத்தை மீறுவதாகும்.

பொது சிவில் சட்டம் என்பது தேவையில்லை. அப்படி வந்தால் அது விருப்ப தேர்வு உரிமையாகவே இருக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்குள் கலந்துரையாடல் நடத்தி பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருந்தால் அதை சரி செய்யலாம். அதை மீறி பொது சிவில் சட்டத்தை திணிக்கக்கூடாது.

இந்தியாவில் வெவ்வேறு பண்பாட்டு விஷயங்கள் உள்ளன. 700 பழங்குடியினர், 4 ஆயிரம் சாதிகள், பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்பாடு உள்ளது. அதை டெல்லியில் இருந்து நாங்களே தீர்மானிப்போம் என்பது சரியல்ல. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. முதலில் பொது சிவில் சட்டம் என்ன என்பதை பொதுமக்கள் மத்தியில் வைத்து கருத்து கேட்க வேண்டும். பின்னர் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x