Published : 11 Dec 2017 09:41 AM
Last Updated : 11 Dec 2017 09:41 AM
கடலுக்குள் கடும் குளிரில் டீசல் கேனை பிடித்தவாறு 38 மணி நேரம் மிதந்தோம் என கடற்படையினரால் மீட்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
ஒக்கி புயலின்போது மாயமான மீனவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கேரள கடல் பகுதியில் மீட்கப்பட்ட சிலர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஜார்ஜ் திதுர்தூஸ்(31) கூறியதாவது: கடந்த 29-ம் தேதி இரவு 11 மணிக்கு கொல்லத்தை சேர்ந்த ஜாபிர்க் என்பவருக்குச் சொந்தமான ‘ஜெபின்’ என்ற விசைப்படகில் 16 பேர் மீன்பிடிக்க சென்றோம். 30-ம் தேதி அதிகாலை திடீரென எழுந்த ராட்சத அலை எங்கள் படகை கவிழ்த்தது. படகில் இருந்த அனைவரும் கடலுக்குள் விழுந்தோம். என்ன நடக்கிறது என யூகிக்க முடியவில்லை.
கடலில் நீந்திய நாங்கள், படகு பாகங்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. சற்று நேரத்தில் படகும் கண்ணுக்கு எட்டாத பகுதிக்கு அடித்து செல்லப்பட்டது. இதேபோல் கவிழ்ந்த மற்ற படகுகளில் இருந்து விழுந்த டீசல் கேன்களை பிடித்தபடி மிதந்தோம். மழை கொட்டியபடி இருந்தது. கடும் குளிரில் உடல் அசைவின்றி மரக்கட்டைபோன்று இருந்தது. அன்று இரவு முழுவதும் மிதந்தோம்.
வேறு படகில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெகன், முட்டத்தைச் சேர்ந்த ஜான்சன் ஆகியோரும் என் அருகில் கேன்களை பிடித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
ஒன்றரை நாளுக்கு மேல் ஆன நிலையில் பக்கத்தில் மிதந்தவர்களுடன் பேச வாயைக் கூட அசைக்க முடியவில்லை. நம் குடும்பத்தின் நிலை என்ன ஆகுமோ? என்று நினைத்தபோது அழுதே விட்டேன்.
1-ம் தேதி மாலை கடற்படையினரின் ஹெலிகாப்டர் ஒன்று எங்கள் பகுதியில் பறந்தது. அவர்கள் கயிற்றை இறக்கியபோது அதை பிடித்தவாறு 7 பேர் மட்டும் கரை வந்து சேர்ந்தோம். மற்றவர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.
கயிறுமூலம் ஹெலிகாப்டரில் ஏறும்போது எனது முதுகு மற்றும் கால் பகுதியில் தசை முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார் கண்ணீருடன். அருகே நின்றிருந்த அவரது மனைவி தெனார்த்தி அவரை தேற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT