Published : 21 Dec 2017 10:27 AM
Last Updated : 21 Dec 2017 10:27 AM
இலங்கை அரசின் சார்பில் யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இலங்கையில் தனியார்களால் பிரத்யேகமாக 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் இயக்கப்பட்டாலும்கூட தமிழகத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்ப்பதற்கு அந்நாட்டு தமிழர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறனர்.
இந்நிலையில் கொழும்பில் நேற்று முன்தினம் இலங்கை அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதாரத் துறை அமைச்சருமான ராஜித சேனரத்ன செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனத்தில் 2000-ம் ஆண்டில் இரண்டாவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பிரிவான ஐ தொலைக்காட்சியில் பெருமளவிலான நேரம் விளையாட்டு நிகழ்ச்சிகளே ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் இலங்கையில் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்காக தொலைக்காட்சியின் தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது.
நல்லிணக்க தொலைக்காட்சி
இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக இந்த தொலைக்காட்சி உதவும் என்பதால் நல்லிணக்க தொலைக்காட்சி (Reconciliation Channel) என்ற பெயரிலிலேயே புதிய தொலைக்காட்சி நிலையத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அதற்கான தொழில்நுட்ப உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன. புதிய தொலைக்காட்சி நிலையம் யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரி பிரதேசத்தில் அமைக்கப்படும் என்று ராஜித சேனரத்ன கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT