Published : 17 Jul 2014 12:12 PM
Last Updated : 17 Jul 2014 12:12 PM
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரவரலாற்றை பறைசாற்றும் அடையாளங்களாகக் காணப்படும், ஆங்கிலேயத் தளபதிகள் மற்றும் வீரர்களின் கல்லறைகள் பரா மரிப்பின்றிப் பாழ்பட்டு வருகின்றன.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்த பூமி பாஞ்சாலங்குறிச்சி. இங்கு உள்ள வீரபாண்டியகட்டபொம்மன் நினைவுக் கோட்டையும், ஆங்கி லேயத் தளபதிகள், வீரர்களின் கல்லறைகளும் சுதந்திரப் போராட்டக் கள வீரத்தை இன்றும் பறைசாற்றி வருகின்றன.
பெரும் போர்
கட்டபொம்மன் ஆங்கிலேயர் களுக்கு வரி கொடுக்க மறுத்து அவர்களை எதிர்த்தபோது, 1799 செப்டம்பர் 5-ம் நாள் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு நடந்த கடும் போரில் பல ஆங்கி லேயர்கள் உயிர் இழந்தனர். இருப் பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேற, ஆங்கிலே யர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. 1799 அக். 1-ல் வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்து, அக். 16 வரை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அக். 16-ம் நாள் கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
ஆங்கிலேயத் தளபதிகள்
1799-ம் ஆண்டு நடந்த போரில், ஆங்கிலேயத் தளபதிகள் டக்லஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக், கர்னல் பின்னி ஆகியோர் கட்ட பொம்மனால் கொல்லப்பட்டனர். இந்தத் தளபதிகளுக்கு ஓட்டப் பிடாரம் தெப்பக்குளம் அருகே, ஆங்கிலேயர்களால் கல்லறைகள் கட்டப்பட்டன. இப்போது, அவை தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஊமைத்துரையின் எழுச்சி
கட்டபொம்மனைத் தொடர்ந்து அவரது தம்பி ஊமைத்துரை 1801-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் அதே இடத்தில் மீண்டும் கோட் டையை எழுப்பி, ஆங்கிலேயர் களுக்கு எதிராகப் போரிட்டார். அந்தப் போரில் ஆங்கிலேயர்கள் கோட்டையை இடித்துத் தள்ளினர். ஊமைத்துரையுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட ஆங்கிலேயப் படைத் தளபதிகள் உள்பட 44 பேருக்குக் கவர்னகிரி சுந்தரலிங்கனார் நகர் அருகே ஆங்கிலேயர்களால் கல் லறைத் தோட்டம் அமைக்கப்பட் டுள்ளது. இந்தக் கல்லறைகளும் தொல்லியல் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளன.
புதிய கோட்டை
கட்டபொம்மன் வீரத்துக்குப் புகழ்சேர்க்கும் விதமாக, 1974-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையைப் போல் ஒரு கோட்டையினைக் கட்ட அப்போதைய முதல்வர் கருணா நிதி உத்தரவிட்டார்.
சுற்றுலாத்துறையின் பராமரிப் பில் உள்ள அந்தக்கோட்டை இன் றளவும் வீரபாண்டியனின் புகழ் பாடி நிற்கிறது. தற்போது 35 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதி கட்டிடங்கள் தொல் பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளன.
மறையும் வரலாறு
பாஞ்சாலங்குறிச்சியில் வீர பாண்டியகட்டபொம்மனின் வீர வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.
வரலாற்று ஆராய்ச்சியாளரும், எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் அமைந்துள்ள ரகுநாதன் நூலகச் செயலருமான இளசை மணியன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: “ கட்டபொம்மன் வீர வரலாற்றின் புற அடையாளங்களாக விளங்குபவை ஆங்கிலேயத் தளபதிகளின் கல்லறைகள். தொல்லியல் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கல்லறைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகின்றன. இந்தப் பகுதிக்குச் செல்லச் சரியான பாதையோ, வழிகாட்டியோ இல்லை. கல்லறையைச் சுற்றி இருக்கும் இடங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கட்டபொம்மன் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கல்லறைகளைப் பார்வையிட வசதி யில்லை. கல்லறை பகுதியில் இருந்த கல்வெட்டும் சேதம் அடைந்துள்ளது. கல்லறைகளைச் சீரமைத்துச் சுற்றுலாப் பயணிகள் அவற்றைப் பார்த்து, கட்ட பொம்மனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள்
கட்டபொம்மன் கோட்டையில் ஆண்டு தோறும் தை மாதம் காணும் பொங்கலன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுவர். அப்போது இங்கே கலைவிழா, வீர விளையாட்டு போன்றவை நடத்த சுற்றுலாத்துறை முன்வரவேண்டும். கட்டபொம்மன் வரலாறு குறித்த ஒலி, ஒளி காட்சிக் கூடம் அமைக்க வேண்டும்.
புதிய மணிமண்டபம்
கயத்தாறில்கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தமிழக அரசு புதிதாக மணிமண்டபம் கட்டு கிறது. இந்தப் புதிய மணிமண்டபத் தில் கட்டபொம்மன், ஊமைத்துரை யின் வீர வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் காட்சி அமைக்க வேண்டும். கட்டபொம்மன் கோட்டைப் பகுதியில் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள், ஆயுதங்கள், கட்டபொம்மன் பயன்படுத்திய பொருட் கள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றை புதிய மணி மண்டபத்தில் வைக்கலாம்’ என்று வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT