Published : 18 Aug 2023 02:14 PM
Last Updated : 18 Aug 2023 02:14 PM

ஆக்கிரமிப்பு நில விவகாரம்: மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியதாக அரசு மீது வன்னியர் சங்கம் காட்டம்

சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்கக் கட்டிடம் | கோப்புப் படம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கி, போட்டித் தேர்வுகளுக்கும், பட்டப்படிப்புக்கும் தயாராகி வந்த மாணவர்களை, எந்த வகையிலும் சம்பந்தப்படாத வருவாய்த் துறை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்று வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார். முன்னதாக, கோயில் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த அரசு நிலத்தில், வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்கக் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காவல்துறை பாதுகாப்புடன் அத்துமீறி நுழைந்த வருவாய்த் துறையினர், அங்கு தங்கி படித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியுள்ளனர். வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கி, போட்டித் தேர்வுகளுக்கும், பட்டப்படிப்புக்கும் தயாராகி வந்த மாணவர்களை, எந்த வகையிலும் சம்பந்தப்படாத வருவாய்த் துறை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சாதி, மத பேதமின்றி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு தங்கியிருந்து பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, பட்டயப்படிப்பு ஆகிய படிப்புகளை பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். ஏராளமான மாணவர்கள் அங்கு தங்கி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். பொதுச்சேவை செய்யும் நோக்குடன் அவர்களை அங்கு தங்க வைத்துள்ள வன்னியர் சங்கம், அந்த மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. அவர்களுக்கு சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், காவல் துறை காவலுடன் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்த வருவாய்த் துறையினர், அங்கு தங்கி படித்து வந்த மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியுள்ளனர். வன்னியர் சங்கத்தின் பராமரிப்பில் உள்ள கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்களை வெளியேற்ற வருவாய்த்துறைக்கு உரிமையில்லை.

வன்னியர் சங்க அலுவலகக் கட்டிடமும், அது அமைந்துள்ள நிலமும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 1980-களின் தொடக்கத்திலிருந்தே பாமக நிறுவனர் ராமதாஸால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 1991-ம் ஆண்டில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கோரி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் வன்னியர் சங்கத்தின் வாதங்களைக் கேட்காமல், அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று 2010-ம் ஆண்டில் பூந்தமல்லி கீழமை நீதிமன்றம் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு வழங்கியது.

அதனடிப்படையில் அந்த இடத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அறநிலையத் துறை தாக்கல் செய்த மனுவை எதிர்த்து வன்னியர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வன்னியர் சங்கத்தின் வாதத்தை கேட்காமல் தீர்ப்பளித்தது தவறு என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்றும், அறநிலையத் துறை வழக்கை கீழ்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த 09.12.2014 அன்று தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் இது குறித்த அறநிலையத் துறை வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போதிலும், அந்த வழக்கை நடத்த இந்து சமய அறநிலையத் துறை எந்த வகையிலும் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு முறையும் அறநிலையத் துறை வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்த வழக்கு வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில் தான், இந்த நிலத்துக்கும், வழக்குக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லாத வருவாய்த் துறை, வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் புகுந்து மாணவர்களை கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்க அலுவலகத்தில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் ஆவர். அவர்களுக்கு வெளியில் தங்கி படிக்க வசதி இல்லாததால் தான், அவர்களுக்கு வன்னியர் சங்கம் இடமும் கொடுத்து, பிற உதவிகளையும் செய்து வருகிறது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். நிலத்தின் உரிமை தொடர்பாக வன்னியர் சங்கத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வருவாய்த் துறையின் இந்த செயல் தவறானது" என்று அவர் கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: முன்னதாக, கோயில் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த அரசு நிலத்தில், வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41,952 சதுர அடி நிலம் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. இந்த நிலமானது வருவாய் பதிவேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் எனத் தாக்கலாகியுள்ளது. இதனை கோயில் பயன்பாட்டுக்கு தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவ்விடம் கோயில் பயன்பாட்டுக்கு பயன்படாமல் பிற நபர்களால் ‘வன்னியர் சங்கக் கட்டிடம்’ என்ற பெயரில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டதோடு அதன் மூலம் அரசுக்கு குத்தகை தொகை எதுவும் செலுத்தப்படாமலும் இருந்து வருகிறது.

எனவே, மேற்படி அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளவற்றை அகற்றிட தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 பிரிவு 7 மற்றும் 6-ஆகியவற்றின் கீழான அறிவிக்கை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 28-11-2022 மற்றும் 6-3-2023 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன. ஆக்கிரம்பு செய்தவர்கள் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாத நிலையில், வருவாய் நிலையாணை எண்.29-ன் பிரிவு 13-ன் படி, மேற்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள, சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் 18-8-2023 அன்று அரசின் வசம் கொண்டு வரும் பொருட்டு பூட்டி சீலிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்விடம் தற்பொழுது சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கூறியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x