Published : 18 Aug 2023 01:05 PM
Last Updated : 18 Aug 2023 01:05 PM
புதுச்சேரி: 10 சதவீத உள்ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட் டுள்ளதால் புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் காத்துள்ளனர். இது குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் கரோடிட்டாப்ளர் கருவி நிறுவப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் ரத்த ஓட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும். அக்கருவியின் செயல்பாட்டை அரசு மருத்துவமனை சென்று துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று பார்வையிட்டார். அதையடுத்து நோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் பகுதிகளை வந்து பார்த்தார். பெண் நோயாளிகள் சீட்டு பதிவின்போது ஆதார் இல்லாமல் பலரும் வந்தனர். மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு இல்லாததால் பலரும் வந்ததை பார்த்து மேம்படுத்தக் கூறினார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு பெற முயற்சி எடுத்து வருகிறோம். அமைச்சரவை ஒப்புதல் கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பினோம், அங்கிருந்து சில தகவல்கள் கேட்டிருந்தனர். முந்தையை துணை நிலை ஆளுநர் (கிரண் பேடி) அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வேண்டாம் என கடுமையான சில வழிமுறைகளை எழுதிவிட்டார். அதற்கு விளக்கம் கேட்டு, அதையும் தந்துள்ளோம். இதனாலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தலக் கல்வியாண்டு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நான் மருத்துவர். நீட் தேவை எங்களுக்கு நன்கு தெரியும். அனைத்துக்கும் நுழைவுத் தேர்வு வந்துள்ளது. வாழ்க்கை சவாலாகி வருகிறது. படிக்க வேண்டும். திறமையாளர்கள் தேவை. உண்மையில் யாரும் தற்கொலை முடிவுக்கு வரக்கூடாது. கோச்சிங் சென்டர் போனால்தான் மதிப்பெண் பெற முடியும் என்பது தவறான கருத்து. நீட் தேர்வு நல்ல திட்டம் - அது தவறாக முன்நிறுத்தப்படுகிறது. உண்மையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போன்றோர்தான் மாணவர்களுக்கு எதிராக பேசுகிறார்கள்.
படிக்க ஆரம்பித்து நல்ல மதிப்பெண் மாணவர்கள் பெற தொடங்கிய நிலையில் நீட் தேர்வின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீர்கள். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சட்டரீதியாக ஏதும் செய்ய முடியாது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனைவிதான் வழக்கில் ஆஜராகி கொண்டு வந்தார். ஏன் ஆதரவாக ஆஜராகிறீர்கள் என அவர்களே (காங்கிரஸாரே) அவரிடம் கேட்கலாம். மருத்துவராக மருத்துவக் கல்விக்கு நீட் தேவை - நீட் பற்றி முதலில் அலசி ஆராயுங்கள். எத்தனை பேர் கோச்சிங் போனார்கள் என்று பாருங்கள்.
கோப்புகளை நிர்வகிக்கும் ஐஏஎஸ் ஆவதற்கு நுழைவுத் தேர்வு தேவை. அதேபோல் உடலை பரிசோதிக்கும் மருத்துவத்துக்கு தேவை. உலகம் முழுக்க உள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி போன்றோர், மாணவர்களுக்கு தயவு செய்து அவநம்பிக்கை தராதீர். நீட்டை எடு்க்க முடியாது என தெரிந்தும் தவறாக மாணவர்களிடம் சொல்லியுள்ளீர்கள். இரண்டரை ஆண்டுகளாக எடுக்க முடியவில்லைதானே. உண்மையில் நீட்டால் மிக எளிமையானவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
ஆயிரம் ரூபாய் மகளிருக்கு அறிவித்தும் தமிழகத்தில் தரவில்லை. 3 நாட்கள் முகாம் வைக்கிறார்கள். நாங்கள், எம்எல்ஏ பட்டியல் கேட்டு தர ஏற்பாடு செய்கிறோம். மக்களுக்கு கிடைப்பது கண்டிப்பாக கிடைக்கும். மக்களுக்கு பயனாற்றுவது பற்றிதான் சிந்திக்கிறேன் - மாநில அந்தஸ்து பற்றி முன்னாள் முதல்வர் கூறுகிறார். அவர்கள் (காங்கிரஸார்) முன்பு எவ்வளவு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தபோது ஏன் வாங்கவில்லை. முன்பு கோப்பைக் கூட மொழிமாற்றம் செய்து அனுப்பச் சொல்லி கிடப்பில் போட்டார்கள். ஆட்சியே செய்யாத மாதிரி, இருந்த போது என்ன செய்தீர்கள். திமுகவும் அந்தக் கூட்டணியில் இருந்தீர்கள் - என்ன செய்தீர்கள் தற்போது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மாநில அந்தஸ்து கோப்பினை ஆளுநர் மாளிகை கிடப்பில் போடவில்லை.
கடந்த மாதம் 22-ம் தேதி கோப்பு வந்தது. 23-ல் டெல்லிக்கு அனுப்பிவிட்டேன். மூன்று மாதங்களாக என்னிடம் அக்கோப்பு வரவில்லை. சும்மா என் மீது பழி போடுவதை ஒத்துக்கொள்ள மாட்டேன். விருந்துக்கு மகிழ்ச்சியாகதான் அழைத்தேன். எதிர்மறை கருத்தாக பரப்ப வேண்டாம். ஜெயலலிதா தாக்கப்பட்டார். அவர் தாக்கப்படவில்லை என்று பொய்யை சொல்லும்போது, உண்மை சொல்வது அரசியல் அல்ல, அவசியம்" என்று தமிழிசை குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT