Published : 18 Aug 2023 10:11 AM
Last Updated : 18 Aug 2023 10:11 AM

தருமபுரி | திருவிழாவுக்கு பயன்படுத்திய வெடி மூட்டையில் தீப்பற்றி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவுக்காக பட்டாசு வெடித்தபோது வெடிகள் இருந்த மூட்டையில் தீப்பற்றிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

பாலக்கோடு வட்டம் வேளாவள்ளி அடுத்த கருப்பா கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (27) உள்ளிட்டோருக்கான குலதெய்வ கோயில் காரிமங்கலம் வட்டம் மொரசுப்பட்டியில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழாவை ஒட்டி கருப்பா கொட்டாய் கிராமத்தில் உள்ள பரசுராமன் மற்றும் உறவினர்கள் நேற்று (ஆகஸ்ட் 17) இரவு சிறிய சரக்கு வாகனம் ஒன்றில் மொரசுப்பட்டிக்கு புறப்பட்டனர்.

இந்த வாகனத்தில் திருவிழாவுக்கு பயன்படுத்த வாங்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் அடங்கிய மூட்டைகள் இருந்தன. கருப்பா கொட்டாய் பகுதியில் ஆங்காங்கே வசிப்பவர்களை ஏற்றிச் செல்ல சென்ற சரக்கு வாகனம் நிறுத்தப்படும்போதெல்லாம் உற்சாகத்துக்காக வெடிகளை வெடித்துள்ளனர். பேளாரஅள்ளி விநாயகர் கோவில் பகுதியில் இவ்வாறு வெடி வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் அடங்கிய மூட்டைகள் மீது தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கருப்பா கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் விஜயகுமார் (21), சுப்ரமணி மகன் பரசுராமன் (27). கார்த்திக் மகள் பிரதக்சனா (6), அழகேசன் மகன் தர்ஷன் (5), திருப்பதி மகள் யாஷிகா (6), முனுசாமி மகன் நாகராஜ் ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தருமபுரியில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர்களில் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த சிறுமி யாஷிகா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயம் அடைந்த மற்றவர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவிழாவுக்கு பயன்படுத்திய வெடியில் தீப்பற்றிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x