Published : 18 Aug 2023 04:52 AM
Last Updated : 18 Aug 2023 04:52 AM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இத்திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, தகுதிகள், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கி சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின்கீழ் அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி, குடும்ப அட்டை, ஆதார் அடிப்படையில் தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின் நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
1.54 கோடி விண்ணப்பங்கள்: அதைத் தொடர்ந்து, 2 கட்டங்களாக நியாயவிலை கடைகள் மூலம் விண்ணப்பங்களை விநியோகித்து, அதை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக 20,765 நியாயவிலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு கடந்த ஜூலை 24 முதல் ஆக.4 வரை முகாம் நடத்தப்பட்டது. இதில், 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்ட முகாம் ஆக.5 முதல் ஆக.14 வரை நடைபெற்றது. இதுவரை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1.54 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, 2 முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆக.19, 20-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அறிவித்தது.
இந்த சூழலில், இத்திட்டத்தில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட பயனாளிகள் தகுதியில் சில தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் பராமரிப்பு உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினரும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வருவாய் துறையின்கீழ் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் மகளிர் உரிமை திட்டத் தில் பயன்பெறும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் முதல்வர் அறிவித்தார்.
மேலும், விலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பம் பதிவு செய்ய, ஆக.18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகின் றன. ஆக.20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்பட 3 நாட்களிலும் விண்ணப்ப பதிவு நடைபெறும்.
சென்னையை பொருத்தவரை, மாநகராட்சியில் உள்ள 1,428 நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். இதர பகுதிகளில் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு அந்தந்த நியாயவிலை கடைகளில் வெளியிடப்பட்டுள்ளது. நியாயவிலை கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் இதுபற்றி கேட்டறிந்தும், குறிப்பிட்டுள்ள இடத்துக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்: சிறப்பு முகாமில் விண்ணப்ப பதிவுக்கு செல்வோர், சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் சான்றிதழ், சொத்து விவரங்களை எடுத்து வர வேண்டாம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT