Published : 26 Jul 2014 09:10 AM
Last Updated : 26 Jul 2014 09:10 AM
சிதம்பர ரகசியத்தைவிட அதற்கு அருகிலிருக்கும் பிச்சாவரத்தை ஒட்டி, நாகை மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் கோட்டைமேடு என்ற ஊரைப் பற்றிய ரகசியம் சுவாரசியமானது.
கொள்ளிடம் ஆற்றுக்குள் நீரோட்டத்தின் நடுவில் இருக்கிறது இந்தத் தீவு. சுமார் பத்து வருடங்களுக்கு முன்புவரை மக்கள் குடியிருந்த இந்தக் கோட்டைமேடு என்னும் கிராமத்தில் தற்போது மனித சஞ்சாரமே இல்லை. அங்கிருந்த மக்கள் அனைவரும் தீவை விட்டு வெளியேறி மகேந்திரபள்ளி, ஆச்சாள்புரம், கொள்ளிடம் போன்ற ஊர்களில் குடியேறி விட்டனர்.
இதுவரையிலும் கோட்டை மேட்டின் வரலாற்றை யாரும் வெளிக்கொணராத நிலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் சிவராம கிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோர் அங்கு பலமுறைகள ஆய்வுக்குச் சென்று அதன் ரகசியத்தை அறிந்து வந்துள்ளனர். நம்மையும் கோட்டை மேட்டுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டி விளக்கம் தந்தனர்.
“தீவுகோட்டை, தேவிகோட்டை, ஜலகோட்டை, தீவுபட்டினம் என்று பல பெயர்கள் இந்த தீவுக்கு இருந்துள்ளது. மிக அழகானதும் பாதுகாப்பானதுமான கோட்டையை எதிரிகள் அழித்ததால் கோட்டை இருந்த இடம் வெறும் கல்மேடாகி கோட்டைமேடாக பின்னர் அழைக்கப்பட்டிருக்கிறது. கோட்டையை பீரங்கிக் குண்டுகள் வைத்து அழித்ததன் அடையாளமாக அவ்வூரில் பல இடங்களிலும் கற்களாலான பீரங்கிக் குண்டுகள் கிடைத்திருக் கின்றன.
இங்கு இருந்த கோட்டையைப் பற்றி சாண்டில்யன் தனது ‘ஜெயபேரிகை’ என்னும் நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தஞ்சையை ஆண்ட சோழமன்னன் தனது மகளுக்கு இக்கோட்டையை சீதனமாக கொடுத்ததாக அவர் குறிப்பிடுகிறார். அவருக்கு முன்னதாக தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரின் அவைக்களப் புலவரான ராமபத்ராம்பாள் எழுதிய ரகுநாத உதயம் என்ற நூலில் தீவுகோட்டையை ரகுநாதநாயக்கர் முற்றுகையிட்டு அழித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தற்போது புதுக்கோட்டை அருங் காட்சியகத்தில் உள்ள 1582-ல் எழுதப்பட்ட சோழமன்னனின் செப்பேட்டிலும் தேவிகோட்டை பற்றிய செய்திகள் காணப் படுகின்றன. இவை தவிர 1597-ல் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கரின் அவைக்களத்துக்கு சென்ற ஜேசுசபையைச் சேர்ந்த பாதிரியார் டிமெண்டோ என்பவர் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளில் பல அரிய தகவல்கள் உள்ளன.
அவரது குறிப்புகளில் இருந்து அப்போதைய தென்னார்க்காடு மாவட்ட பகுதிகளை ஆண்டுவந்த கிருஷ்ணப்ப நாயக்கருக்கு கட்டுப்பட்ட ஒரு சிற்றரசனாக இந்த தீவுகோட்டையில் வாழ்ந்தவர் சோழகனார் எனத் தெரியவருகிறது. இந்த கோட்டையை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் முற்றுகையிட்டு கைப்பற்றியிருக்கிறார். அப்போது செஞ்சியை ஆண்ட மன்னரின் படைகள் சோழகனுக்கு உதவியாக வந்தும் பலனில்லாமல் தோற்றுப் பின்வாங்கியதாக தகவல் உள்ளது” என்கிறார் முனைவர் சிவராமகிருஷ்ணன்.
கடற்படைத் தளம்
இந்த தீவுக் கோட்டையின் வரலாறு 400 ஆண்டு கால வரலாற்றுக்கும் முன்னோக்கியது என்கிறார் முனைவர் கலைச்செல்வன். “நாவாய்கள் என்னும் கப்பல்களை கட்டி முதன்முதலாக கடற்படையை உருவாக்கி சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய ராசேந்திர சோழனின் ஒரு கடற்படைத் தளமாக இது இருந்திருக்க வேண்டும்.
அந்நியர்கள் மற்றும் கடற்கொள்ளையர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க இங்கே கப்பல்களை நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். வீரர்கள் தங்கியிருந்த பட்டினமாக இவ்வூர் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. தஞ்சையில் இருந்து தலைநகரத்தை கங்கைகொண்ட சோழபுரத் துக்கு ராசேந்திரன் மாற்றியமைத் ததற்கும் இக்கோட்டைக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். தலை நகரத்துக்கு வேண்டியவற்றை கடல்வழியே கொண்டு வந்த ராசேந்திர சோழன் அதை கொள்ளிடம் ஆறுவழியாகவே நீர்வழிப்பாதையில் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்” என்கிறார்.
ஆக மொத்தம் அரிய வரலாற்று புதையல் கோட்டைமேட்டில் புதைந்து கிடக்கிறது. அதை அகழாய்வு செய்தால் தமிழனின் கலாச்சார பெருமை மற்றும் வீரமரபு ஆகியவை தெரியவரலாம்.
அசைக்க முடியாத சக்தியானார் ராபர்ட் கிளைவ்
ஒரு கட்டத்தில் போர்த்துகீசியர்கள் வசம் இருந்த இந்த தீவுகோட்டையை கடலூரை கைப்பற்றியிருந்த வெள்ளையர்கள் கைப்பற்ற முயன்றனர். 1749-ல் கேப்டன் ஜேம்ஸ் கோப் தலைமையில் வந்தவர்களால் வெற்றி காணமுடியாத நிலையில் கடலூரில் இருந்து மேஜர் ஸ்டிங்கர் லாரன்ஸ் சிங் என்பவர் தலைமையிலான அடுத்த படையில் ஒரு வீரனாக வந்த ராபர்ட் கிளைவ், போரில் வெள்ளையர் படை தோற்றுப் பின்வாங்கிய நிலையிலும் சக வீரர்கள் நால்வருடன் கோட்டைக்குள் நுழைந்து போரிட்டு கோட்டையை கைப்பற்றினார். அதில் இருந்துதான் ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனியின் அசைக்க முடியாத சக்தியானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT