Last Updated : 06 Dec, 2017 11:15 AM

 

Published : 06 Dec 2017 11:15 AM
Last Updated : 06 Dec 2017 11:15 AM

ஒக்கி புயல் தாக்கி 6 நாட்களான நிலையில் குமரியில் மீன்பிடி துறைமுகங்கள் முடங்கின: படகுகளில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் அழுகின

ஒக்கி புயல் தாக்கி 6 நாட்களான நிலையில், குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன்பிடி துறைமுகங்கள் முடங்கிப் போயுள்ளன. கரைசேர்ந்த படகுகளில் இருந்த மீன்கள் அழுகி விட்டதால் எண்ணெய் மற்றும் உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன.

ஒக்கி புயல் தாக்கிய தினத்தன்று நீண்ட போராட்டத்துக்கு பிறகு கரை திரும்பிய கட்டுமரங்களும், விசைப்படகுகளும் மீன்பிடி தளங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. சக மீனவர்கள் மாயமான சோகத்தில் இருந்து மீளமுடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர். இதனால், பிடிபட்ட மீன்களைக் கூட விசைப்படகுகளில் இருந்து இறக்கவில்லை. 6 நாட்கள் படகிலேயே இருந்ததால் மீன்கள் அழுகி சேதமடைந்தன.

இந்நிலையில், குளச்சல், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகளில் இருந்து மீன்களை தளத்தில் இறக்கினர். 6 நாட்களாக படகிலேயே இருந்ததால், கொழிசாளை, கணவாய், நவரை ஆகிய ரக மீன்கள் அழுகிப்போயிருந்தன. கருவாடாக்குவதற்குக் கூட அவற்றை பயன்படுத்த முடியாது என்பதால், பெட்டிகளில் அதிகளவு உப்பு கலந்து, மலிவு விலையில் கூடங்குளத்தில் உள்ள மீன் எண்ணை தயார் செய்யும் நிறுவனத்துக்கும், உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தனர்.

பெரும் நஷ்டத்தில் தவிப்பு

‘மொத்தம் ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள், ரூ.5 லட்சத்துக்கு கூட விற்கப்படவில்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். மீன்பிடி தொடர்பான பணிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகும்’ என, மீனவர்கள் தெரிவித்தனர்.

பழ.நெடுமாறன் கோரிக்கை

இந்நிலையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்ட்ரா, குஜராத், லட்சத்தீவுகள் போன்ற இடங்களில் கரை ஏறிய மீனவர்களை பத்திரமாக தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x