Published : 18 Aug 2023 04:46 AM
Last Updated : 18 Aug 2023 04:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 நாட்களில் பிடிப்பட்ட 8 மலைப்பாம்புகள், அதிக விஷத்தன்மை கொண்ட 13 பாம்புகள் வனத்துறையினர் மீட்டு, காப்புக்காடுகளில் விடுவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 400 சதுர கிலோமீட்டர் பரப்பில் காடுகள் அமைந்துள்ளன. இதில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஊடேதூர்கம், சிங்காரப்பேட்டை, தொகரப்பள்ளி, ஒசூர், ஜவளகிரி ஆகிய வனசரகங்கள் உள்ளன. இந்த வனச்சரங்களுக்குட்பட்ட வனபகுதிகளில் யானை, சிறுத்தைப்புலி, கடமான், புள்ளிமான், காட்டுபன்றி, மயில், உடும்பு, கீரிபிள்ளை மற்றும் ஏராளமான மலைபாம்புகள் உள்ளன.
கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் மலைப்பாம்புகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, பாரூர், காவேரிப்பட்டிணம் உள்ளிட்ட 16 காப்பு காடுகளிலிருந்து அண்மை காலமாக மலைப்பாம்புகள் கிராம பகுதிகளுக்கும், விவசாய நிலங்களிலும் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி நகர், வேலம்பட்டி, காவேரிப்பட்டணம், பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் புகுந்த மலைபாம்புகளை, பொதுமக்கள் அளித்த தகவலின்படி வனத்துறையினர் பிடித்தனர்.
இதே போல் பிறவகை பாம்புகளை பிடித்தனர். இவை அனைத்தும் கிருஷ்ணகிரி வனச்சரகர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து வனச்சரகர் ரவி கூறும்போது, "கடந்த 10 நாட்களில் மட்டும் 8 மலைபாம்புகள், 5 நாகபாம்புகள், 3 சாரை பாம்புகள், 3 கண்ணாடி விரியன் மற்றும் 2 கட்டுவிரியன் பாம்புகள் பிடிப்பட்டுள்ளன. இதனை தவிர, வேப்பனப்பள்ளி சாலையில் இருந்து அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றும் பிடிப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வந்த 2 பச்சை கிளியையும் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இவை அனைத்தும், வனத்துறை பணியாளர்கள் மேலுமலை, வேப்பனப்பள்ளி, மகாராஜகடை காப்பு காடுகளில் விடுவிக்க உள்ளனர்.
பாம்புகள் குடியிருப்புகள், நிலங்களிலோ வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதை பாதுகாப்பாக பிடித்து காட்டில் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாம்புகளை அடித்து துன்புறுத்துவதோ, அதை கொல்வதோ குற்றமாகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT