Published : 17 Aug 2023 09:53 PM
Last Updated : 17 Aug 2023 09:53 PM
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் முதல்வர் ஸ்டாலினால் கடந்த 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக முதல்வர் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகைபுரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, விண்ணப்பங்கள் பெறுதல், களஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT