Published : 17 Aug 2023 07:25 PM
Last Updated : 17 Aug 2023 07:25 PM

”எய்ம்ஸ் டெண்டர் 2024 மக்களவைத் தேர்தலுக்கான நாடகமா?”- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

ராமநாதபுரத்தில் நடந்த தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம்: "கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து டெண்டர் அளவுக்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இனியாவது விரைவாக கட்டி முடிப்பார்களா, இல்லை, இதுவும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திமுகவின் தென் மண்டல வாக்குசாவடி முகவர் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இதில் முதல்வர் பேசியது: "நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக ஆட்சி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது. இதற்கு 2024-இல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக செய்து தரவில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என்று சொன்னார்களே, 15 ஆயிரமாவது தந்தார்களா? இல்லை. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று சொன்னாரே பிரதமர் மோடி, வேலைவாய்ப்பு வந்ததா? இல்லை. உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று சொன்னாரே? ஆக்கினாரா? இல்லை.

பெரிய பெரிய விஷயங்களைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்துக்குத் தந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றினீர்களா என்று பிரதமர் நரேந்திர மோடியை நான் கேட்கிறேன். அதுவும், ராமநாதபுரத்தில் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராமநாதபுரத்துக்கு வந்து போட்டியிடுங்கள் என்று, பிரதமரை சிலர் அழைப்பதாக ஊடகங்களில் தகவல் வருகிறது. இதே ராமநாதபுரத்துக்கு வந்து பேசும்போது சொன்ன வாக்குறுதியையாவது பிரதமர் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறாரா?

2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராமநாதபுரத்துக்கு வந்து மோடி பேசினார். அப்போது அவர் பிரதமர் ஆகவில்லை. வாக்கு கேட்டு வந்து பேசுகிறபோது என்ன சொன்னார்? மிகப்பெரிய புண்ணியத் தலமான ராமேஸ்வரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்று நரேந்திர மோடி சொன்னாரா, இல்லையா? ராமேஸ்வரத்தை உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றிவிட்டார்களா? அம்ருத் திட்டம் – சுதேஷ் திட்டம் என்று சில கோடி ரூபாய்களை ஒதுக்கி, பாதாளச் சாக்கடைத் திட்டம் செய்திருக்கிறார்கள். அதையும் அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக செய்யவில்லை.

1964-இல் வீசிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி அழிந்து போய்விட்டது. ராமேஸ்வரம் தாண்டி தனுஷ்கோடி வரை முன்பு ரயில்கள் வந்து போனது. புயலால் தனுஷ்கோடி பாதிக்கப்பட்டதில் ரயில் பாதைகளும் காணாமல் போய்விட்டது. தனுஷ்கோடி வரை மீண்டும் பாதை அமைத்து ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக 2019-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டினார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17 கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதை இன்னும் வரவில்லை. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக மோடி சுட்ட பல வடைகளில் அதுவும் ஒன்று. தேர்தல் முடிந்ததோடு, அது ஊசிப் போனது. அது இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

இதுபோல் தமிழகத்துக்காக பல ஸ்பெஷல் வடைகள் சுடப்பட்டன. அதில், மோடி அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி, மீனவர்கள் தொடர்பானது. ''தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்" என்று இதே ராமநாதபுரத்தில் வைத்துதான் மோடி சொன்னார்.

பாஜக ஆட்சியில் இருக்கும் இந்த 9 ஆண்டு காலத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன் என்று குமரியில் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி மோடி பேசினார். அவரின் சபதத்தை நிறைவேற்றிவிட்டாரா?

2014 முதல் தமிழக மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? 2017-ஆம் ஆண்டு தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலைக்கு யார் பொறுப்பு? 2021-ஆம் ஆண்டு மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு? பலரும் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கிறது.

நாளைக்கு மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறேன். அப்போது இது பற்றி இன்னும் விரிவாக பேசுவேன். மீனவர்களை விரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை பறிப்பது என்று அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதை தட்டிக் கேட்கிற அரசாக பாஜக அரசு இல்லை. மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் அவர் முன்பு சொன்ன மாதிரி, இவர் ஆட்சியும் பலவீனமான ஆட்சி என்று தானே அர்த்தம்?

2015-ஆம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இருந்தபோது ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால் இன்றைக்கு வரைக்கும் எய்ம்ஸ் செங்கல்தான் இருக்கிறது மருத்துவமனை வரவில்லை. இப்போதுதான் அதற்கு டெண்டரே விட்டிருக்கிறார்களாம். அதாவது, 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து டெண்டர் அளவுக்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இனியாவது விரைவாக கட்டி முடிப்பார்களா, இல்லை, இதுவும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டியாக பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு முழுவதும் வசூல் செய்கிற பாஜக அரசுக்கு ஆயிரம் கோடியை ஒதுக்கி ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தர மனமில்லை.

இதையெல்லாம் நாம் கேட்கிறோம் என்பதால் திமுகவைக் கடுமையாக தாக்குகிறார்கள். பிரிவினையைத் தூண்டுகிறோம் என்று திசை திருப்புகிறார்கள். பொய் சொல்கிறார்கள். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார்? ஒரு காலத்தில் நாம் திராவிடநாடு கேட்டவர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அது, இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான பேச்சுதானே தவிர, இதில் பிரிவினை எங்கே இருக்கிறது? இதை வெட்டி ஒட்டி, வாட்ஸ்அப்-இல் ஒரு குரூப் அனுப்ப, மக்களவையில், பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். ராஜாஜியும், காமராசரும், எம்ஜிஆரும் அப்துல் கலாமும் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என்று கேட்கிறார் பிரதமர்.

அவருக்குச் சொல்வேன், திராவிடநாடு கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் திமுகவில் இருந்தவர்தான் எம்ஜிஆர். அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று வாயசைத்துப் பாடிக்கொண்டு இருந்தவர்தான் எம்ஜிஆர், இதை எல்லாம் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் வருவதையெல்லாம், வரலாறு என்று நம்புவது பிரதமர் என்ற பதவிக்கு அழகல்ல.

வகுப்புவாதத்தை துளியும் ஏற்காதவர் பெருந்தலைவர் காமராசர். டெல்லியில் அவர் தங்கி இருந்த வீட்டைக் கொளுத்த முனைந்தது யார் என்பதை தெரிந்து கொண்டு பிரதமர் பெருந்தலைவர் காமராசர் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சொந்தக் கட்சியில் சொல்லும் அளவுக்கு தலைவர்கள் இல்லாததால் மாற்றுக் கட்சித் தலைவர்களைக் கடன் வாங்கி திமுகவை விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி.

இப்போதுதான் சகோதரி கனிமொழி சொன்னதால், சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . அதை அவர் முழுமையாக படிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஓய்வு கிடைக்கும். அப்போது முழுமையாகப் படிக்க நேரம் கிடைக்கலாம். ஆனால், அதற்கு முன்பு நிதியமைச்சரின் கணவரான டாக்டர் பரகலா பிரபாகர் எழுதிய ‘The Crooked Timber of New India‘ என்ற புத்தகத்தை ஒன்றிய பாஜக அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும் என்று சொல்கிறார் நிதி அமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர் . என்னை இந்தி படிக்கவிடவில்லை, சமஸ்கிருதம் படிக்கவிடவில்லை என்று முடிந்து போன காலத்தைப் பற்றி கதை விடுகிற நிதி அமைச்சர், இனி நடக்கப் போகிறதைப் பற்றி படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அம்மையார் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நடத்திய நாடகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் நிதி அமைச்சருக்கு மணிப்பூரில் ஆடை களையப்பட்டு இழுத்து வரப்பட்ட பெண்களைப் பார்த்து ஏன் கண்ணீர் வரவில்லை? ஒன்றரை மணி நேரமாக மக்களவையில் பேசிய பிரதமருக்கு மணிப்பூர் என்கிற ஒரு மாநிலமே நினைவுக்கு வரவில்லையே. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு ஒப்புக்கு ஒரு சில நிமிடங்கள் அதைப் பற்றி பேசியிருக்கிறார். மக்களவைக்கு வர மறுப்பதும், மணிப்பூர் பற்றி பேச மனமில்லாமல் இருப்பதும்தான் பிரதமரின் பின்னடைவைக் காட்டுகிறது இது மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக, உறுதுயாக எதிரொலிக்கும். வடக்கைத்தான் அவர்கள் அதிகம் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது வட மாநிலங்களையும் இழக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியின் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, நிதி அமைச்சரோ திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால் திமுக சரியாக இருக்கிறது என்று பொருள்.

தமிழகத்தில் பாஜகவின் பாதம் தாங்கியாக இருப்பது யார், பழனிச்சாமி. அதிமுக, பாஜகவின் அடிமை. திமுக எதிர்ப்பு ஒன்று மட்டும்தான் அதிமுகவுக்குத் தெரியும். நம் மீது பல அவதூறுகளையும், பொய்களையும் சொல்லித்தான் அவர்களுக்கு அரசியல் செய்யத் தெரியும். சொந்தமாகச் சொல்லிக்கொள்ள அவர்களுக்கு என்று எந்தத் தியாக வரலாறோ, கொள்கையோ கிடையாது. அதனால்தான் திமுக எதிர்ப்பை மட்டுமே நம்பி அரசியல் செய்து இன்றைக்குத் தமிழக மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிமுக, பாஜக போன்றவர்களின் பொய்களுக்கும் எதிர்ப்புக்கும் அஞ்சும் இயக்கம் அல்ல, திமுக. எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம்தான் இந்த இயக்கம். ஏன் என்றால், இது மக்களுக்கான இயக்கம். மக்களோடு இருக்கும் இயக்கம். மக்களின் ஆதரவோடு என்றென்றும் பணியாற்றும் இயக்கம். எனவே, மக்கள் மன்றத்தில் எங்களைக் கொச்சைப்படுத்த நினைத்தால் அது நடக்காது.

மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால் என்ன வேண்டும் ஆனாலும் திமுக பற்றி வசைபாடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாங்கள் மாநில கட்சிதான். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலனுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே மாநிலக் கட்சிதான் திமுக. நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பேசும் அவதூறுகளுக்கு அஞ்சாமல் பதிலளித்து நமது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டு வருகிறார்கள் நம்முடைய கழக எம்.பி.,க்கள். திமுக உறுப்பினர்கள் கொள்கையைப் பேசுகிறார்கள், பயமில்லாமல் பேசுகிறார்கள் என்பதுதான் பாஜகவுக்கு கோபம். திமுக பேசும் கொள்கைகளை மற்ற கட்சியினரும் பின்பற்றிப் பேசுகிறார்கள் என்பதுதான் பாஜகவுக்கு எரிச்சலாக இருக்கிறது. அகில இந்தியக் கட்சிகள் சில, நம்முடைய கருத்தியலை உணர்ந்து மனமாற்றம் அடைந்து வருகின்றன.

நம்முடைய கொள்கை இந்திய ஒன்றிய ஆட்சியை வழிநடத்தும் கொள்கையாக மாற வேண்டும். அதற்கு தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும். அகில இந்தியா முழுமைக்கும் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-வுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் நமது தேர்தல் முழக்கமாக அமையப்போகிறது. பாஜகவினர் தங்களை எதிர்ப்பவர்களைப் பார்த்து Anti Indians என்று பழிசுமத்துவது வழக்கம். இப்போது இந்தியாவை எதிர்க்கும் Anti Indian-களாக பாஜகவினர் இருக்கிறார்கள்" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x