Published : 17 Aug 2023 06:20 PM
Last Updated : 17 Aug 2023 06:20 PM
புதுச்சேரி: “மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் துரோகி; புதுச்சேரி ஆளுநர் எதிரி” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக விமர்சித்தார். “தேர்தலில் நிற்பதே தமிழிசைக்கு கொள்கை; அவர் சொல்வது மக்களுக்கு எதிரான கருத்துகள்தான்” என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலனடைந்துள்ளனர் என்று அப்பட்டமான பொய்யை தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையில் தமிழக ஆளுநர் விளையாடி இருக்கிறார். அவருடைய செயல் ஒரு ஆளுநர் பதவிக்கு தகுதியில்லாத செயல். இது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் துரோகி என்பதை காட்டுகிறது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசையோ, நீட் தேர்வால் மாணவர்கள் பலனடைந்துள்ளனர் என்று மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் துரோகி என்றால், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிரியாக இருக்கிறார். இந்திய அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவியை வைத்துக் கொண்டு ஆர்.என்.ரவி செய்யும் அதே வேலையை தமிழிசையும் செய்கிறார். இவர்கள் அமித் ஷாவின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள். ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இவர்களில் யார் முதல்வர் என்று தெரியவில்லை. இந்த ஆட்சியில் கோமாளிகள்தான் இருக்கிறார்கள்" என்றார்.
எம்.பி. வைத்திலிங்கம் தாக்கு: அதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள திரவுபதி முர்மு பழங்குடியின மக்களை சார்ந்தவராக இருந்தாலும் கூட, அவருக்கு கூட உண்மையான நிலையை எடுத்துக் கூறாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனயைாக இருக்கிறது. இதை கண்டித்துதான் காங்கிரசும், இண்டியா கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தின. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒரு பெண்மணியாக இருந்தாலும் கூட, ஒரு பெண்ணுக்கு ஏற்படுகின்ற துன்பத்தை பார்த்துக்கூட அதற்கு உண்டான வருத்தத்தை மாநில மக்களுக்கு அவர் தரவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை மக்களின் சார்பாக இவர்கள் ஏதாவது உதவி செய்திருக்கிறார்கள் என்றால் இல்லை. இப்படி மலைவாழ் மக்களின் உரிமையை பறிக்கும் செயலை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஆளுநர் செயல் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் தமிழிசை கருத்து சொல்கிறார். அவர் கூறும் கருத்தை தமிழகம், தெலுங்கானாவில் யாரும் கேட்பதில்லை. புதுச்சேரியிலும் அவர் கூறுவதை யாரும் கேட்பதில்லை. அவர் செல்வதெல்லாம் மக்களுக்கு எதிரான கருத்துகள்தான்.
மக்களுக்கு எதிரான கருத்துகளை கூறினால், சொந்த கட்சியாக இருந்தாலும், சொந்த அப்பாவாக இருந்தாலும் கேட்க மாட்டார்கள். பிரதமர், அமித்ஷாவின் ஆதரவை பெற்று தேர்தலில் நிற்க வேண்டும் என்பதே அவரின் கொள்கையாக உள்ளது. நாட்டு மக்களுக்கும், புதுவை மக்களுக்கும் எதாவது நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே ஆளுநர் தமிழிசைக்கு இல்லை'' என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT