Published : 17 Aug 2023 02:47 PM
Last Updated : 17 Aug 2023 02:47 PM

மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை முதல்வர் அறிவிப்பாரா?

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபத்தில் நாளை (ஆக.18) நடைபெறும் மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மீனவர்களுக்கான திட்டங்களை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடையே எழுந்துள்ளது.

2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கென பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டுள்ளது.

கச்சத்தீவு மீட்பு: அதில், கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கும், சிறைபிடிக்கப்படுவதற்கும் நிரந்தரமான தீர்வு மற்றும் இருநாட்டு கடற்கரைப் பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்கள் உருவாக்கப்படும். மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கவும் மத்திய அரசிடம் வற்புறுத்தப்படும்.

2 லட்சம் வீடுகள்: புயல், வெள்ள பாதிப்பிலிருந்து மீனவ மக்களைப் பாதுகாக்க, தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். மீனவர் சங்கங்களின் பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில் மீனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க ஆவண செய்யப்படும்.

மீனவர்களுக்கான தொலை தொடர்பு வசதி: புயல், சூறாவளி மற்றும் சுனாமி போன்ற பேரிடர் நிகழ்வுகளின்போது, ஆழ்கடலில் சிக்கிக் கொள்ளும் மீனவர்கள், ரேடியோ வயர்லெஸ் தொடர்பு கருவி மூலம் கரைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, கடற்கரையோரங்களில் உயர்கோபுரங்கள் அமைத்து தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி உருவாக்கப்படும்.

தடைக்கால நிவாரணத் தொகை அதிகரிப்பு: 45 நாட்கள் இருந்த மீன்பிடித் தடைக்காலத்தை, 2017-ம் ஆண்டு முதல் ஏப்.15 முதல் ஜுன் 14 வரை என 61 நாட்களாக மத்திய அரசால் அதிகரிக்கப்பட்டது. ஆனால், தடைக்கால நிவாரணத் தொகை அதிகரிக்கப்படாமல், அதே ரூ.5,000 மட்டுமே வழங்கப்படுகிறது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையை மட்டும் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. ஆனால், மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத்தவில்லை.

இதே போல், விசைப்படகுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் 1,800 லிட்டரை 2,000 லிட்டராகவும் மற்றும் கட்டுமரம், நாட்டுப் படகு, பைபர் படகு போன்றவற்றுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு 300 லிட்டரிலிருந்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், ஆக.18-ம் தேதி ராமேசுவரம் அருகே மண்டபத்தில் நடைபெறும் மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்காக குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.

இது குறித்து மாவட்ட திமுக மீனவர் அணியினர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஐஸ் பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள், புதிய மீன்பிடி இறங்குதளம், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள், மீனவக் கிராமங்களில் கடல் அரிப்பினைத் தடுக்க தூண்டில் வளைவு தடுப்புச் சுவர் அமைத்தல், தடைக்கால நிவாரணம் மற்றும் மானிய டீசல் அதிகரிப்பு குறித்த அறிவிப்புகளை, மண்டபம் மீனவர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x