Published : 17 Aug 2023 01:20 PM
Last Updated : 17 Aug 2023 01:20 PM
கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை முக்கியமானதாகும். இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை 4 வழித்தட மேம்பாலம் அமைக்கும் வகையில், கடந்த 2.4.2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், திட்ட வடிவத்தில் சிறிது மாற்றம்செய்யப்பட்டது. தொடர்ந்து, ரூ.127.50 கோடி மதிப்பில் திட்டப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர், மக்களின் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலைகளில் திரும்பும் வகையில் பாலம் நீட்டிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் கூறும்போது,‘‘பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், வாளையாறு, பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை முக்கியமானதாகும். இச்சாலை வழியாக தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக மேம்பால பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்’’ என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆத்துப்பாலம் - உக்கடம் வரை முதல் பிரிவாகவும், ஆத்துப்பாலம் - பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, சுங்கம் சாலை ஆகியவை நீட்டிக்கப்பட்ட பிரிவாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆத்துப்பாலம் - உக்கடம் முதல்கட்டப் பிரிவில் அனைத்து பணிகளும் கடந்த மே மாதம் முடிக்கப்பட்டு விட்டன.
ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டிய இடத்தில் இறங்கி ஒப்பணக்கார வீதியை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதில், கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை 4 வழித்தட மேம் பாலமாகவும், ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்கு தளம் 2 வழித்தடமாகவும் கட்டப்பட்டுள்ளது. முதல்கட்டப் பிரிவில் மேம்பாலத்தின் மொத்த தூரம் 1,454.80 மீட்டராகும்.
அதேபோல, 2-ம் கட்ட நீட்டிக்கப்பட்ட பிரிவில் ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலையை மையப்படுத்தி அமைக்கப்படுகிறது. 2-ம் கட்ட நீட்டிப்புத் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. இதில் தற்போது சுங்கச்சாவடி இருந்த இடத்தில் மேம்பாலம் அமைப்பதற்காக தாங்குதூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி மற்றும்பாலக்காடு சாலைகளில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆத்துப் பாலத்தில் இருந்து உக்கடம் மார்க்கத்தில் சென்று சுங்கம் -வாலாங்குளம் பைபாஸ் சாலையில் இறங்கும் வகையில் ஒரு தடமும், இதற்கு அருகே ஆத்துப்பாலம் நோக்கி செல்பவர்கள் ஏறுவதற்கான தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பாலப் பணிகள் ரூ.170.61 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்காக மொத்தம் 7,210சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. தற்போது, இதில் 4 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, என்றனர்.
நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சுந்தர மூர்த்தி கூறும்போது, ‘‘முதல் கட்ட திட்டத்தில் 100 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. இரண்டாவது கட்ட நீட்டிப்புப் பிரிவு திட்டத்தில் 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. சில மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT