Published : 17 Aug 2023 04:53 AM
Last Updated : 17 Aug 2023 04:53 AM
சென்னை: உப்பூர் மின் திட்டத்தை தொடர்வது குறித்து அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால், அந்த திட்டத்துக்கான நிலத்தை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க உள்ள தனியார் நிறுவனத்துக்கு வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் 800 மெகாவாட் திறனில் இரு அலகுகள் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் பணியை ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்துக்கு 982 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில் பெரும்பாலும் கையகப்படுத்தப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் 2 பிரிவுகளை கொண்டது.
அதன்படி, பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர் சாதனங்கள் நிறுவனம் பணியை மத்திய அரசின் பிஎச்இஎல் நிறுவனமும், மற்ற கட்டுமான பணிகளை தனியார் நிறுவனமும் மேற்கொள்கின்றன. திட்டச் செலவு ரூ.12,775 கோடி. இந்த நிதி, மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உப்பூர் மின்திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம் 40 சதவீத பணிகள் முடிந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தடை விதித்தது.
இந்நிலையில், உப்பூர் மின்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உடன்குடி மின்நிலையம் அருகில் உடன்குடி விரிவாக்கம் என்ற பெயரில் 1,320 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் அமைக்க மின்வாரிய இயக்குநர் குழு கடந்த 2021 ஏப்.29-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இத்தகைய சூழலில், உப்பூர் மின்திட்டம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தின் தடைக்கு, உச்ச நீதிமன்றம் ஜுலை மாதம் தடை விதித்தது.
அரசிடம் ஆலோசனை: இதையடுத்து, உப்பூர் மின்திட்டத்தை தொடரலாமா அல்லது உடன்குடிக்கு மாற்றலாமா? என்பது குறித்து தமிழக அரசிடம் மின்வாரியம் ஆலோசனைக் கேட்டது. அதில், உப்பூர் மின்திட்டத்தைத் தொடங்க அரசு ஆலோசனை வழங்கியது.
மேலும், முதல்வருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசனைக் குழுவின் கீழ், மின்துறையை மேம்படுத்த நியமிக்கப்பட்ட அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழுவிடம் கடந்தாண்டு இறுதியில்ஆலோசனைக் கேட்கப்பட்டது. ஆனால், இதுவரை அக்குழுவிடம் இருந்து அறிக்கை கிடைக்கவில்லை.
இந்நிலையில், உப்பூர் மின்திட்ட இடத்தை பசுமை மின்சாரத்தில் ஹைட்ரஜன் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT