Published : 17 Aug 2023 06:23 AM
Last Updated : 17 Aug 2023 06:23 AM
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக10 ஆயிரம் சுயஉதவி குழுக்கள்உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு சுழல் நிதி வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுவினரின் தயாரிப்புகளை விற்க, ‘மதி சந்தை’ இணையவழி விற்பனை தளம் விரைவில் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: எந்த திட்டம் ஆனாலும், தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்தால்தான் தொய்வின்றி தொடரும். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புக்காக 2023-24-ல் புதிதாக 10 ஆயிரம் சுயஉதவி குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு சுழல் நிதி வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகள்: மேலும், 5 ஆயிரம் சுயஉதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.75 கோடி, 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி, ஊக்குநர், பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க ரூ.3.30 கோடி, 12,287 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் 388 வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் அலுவலக நிர்வாகிகளுக்கு ஆளுமை, நிதி மேலாண்மை குறித்த புத்தாக்க பயிற்சி வழங்க ரூ.24.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணை வாழ்வாதார பணிக்கு ரூ.60.27 கோடி, பண்ணை சாரா வாழ்வாதார பணிக்கு ரூ.18.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விற்பனை அங்காடிகள்: மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக 2022-23-ல் நடந்த கண்காட்சிகளில் 3,528 சுயஉதவி குழுக்கள் ரூ.3.75 கோடி அளவுக்கு விற்பனை செய்துள்ளன. மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் 137 விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முறையான பேக்கிங், தயாரிப்புகளை தரப்படுத்த மதி வணிக முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-23-ல் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கரூ.25 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கடன்இணைப்பு வழங்க நிர்ணயிக்கப் பட்ட இலக்கான ரூ.45 ஆயிரம் கோடியை தாண்டி ரூ.47,034 கோடி வழங்கி சாதனை படைத்துள்ளது.
இந்த 2023-24-ம் ஆண்டு வங்கிக்கடன் இணைப்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.30 ஆயிரம் கோடியில், கடந்த ஜூன் 30 வரை ரூ.5,644 கோடிவங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்க வேண்டும். மேலும், சுயஉதவிகுழுக்களின் தயாரிப்புகளை விற்க,‘மதி சந்தை’ என்ற இணையவழிவிற்பனை தளம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்க, மாநில, மாவட்ட அளவில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.
‘மதி எக்ஸ்பிரஸ்’ வாகனங்கள்: இதுதவிர, உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்கவும்முக்கிய சுற்றுலா தலங்களில் ‘மதிஅங்காடிகள்’ நிறுவப்படும். பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக ‘மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்’ வழங்கப்பட உள்ளன. சுயஉதவி குழுக்களால் இயக்கப்படும் ‘மதி திணை உணவகங்கள்’, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட உள்ளன.
முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு, மகளிர் மேம்பாட்டு நிறுவன சுயஉதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்பு மூலம், தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் சுகம்ய பாரத் அபியான் (தடையற்ற சூழலை உருவாக்குவதற்கான இயக்கம்) திட்டத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டத்தின் பயன் மக்களை முழுமையாக சென்றடைய துறை தலைவர்கள், அரசு அலுவலர்கள் முழு மனதுடன்செயல்பட வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீங்கள் பகிரும் கருத்துகளை நான் கேட்டு தெரிந்து கொண்டு நிச்சயம் அதற்குரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, சு.திருநாவுக்கரசர், திருமாவளவன், நவாஸ்கனி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், அசன் மவுலானா, செங்கோட்டையன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment