Published : 15 Dec 2017 11:23 AM
Last Updated : 15 Dec 2017 11:23 AM

100 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்: பதவிகளை கைப்பற்ற கடும் போட்டி

இந்தியாவில் நூற்றாண்டு பழமையான பாரம்பரியமிக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவுன்சில் உறுப்பினர் பதவிகளை கைப்பற்ற மருத்துவர் அணிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலைபோல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முக்கியத்துவம் வாய்ந்தது. நோயாளிகளுக்கு தவறாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் லைசென்ஸை ரத்து செய்யும் அதிகாரம் படைத்தது இந்த மருத்துவ கவுன்சில்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் 1914-ல் மருத்துவ கவுன்சில் தொடங்கப்பட்டது. அதன் பிறகே இந்திய மருத்துவ கவுன்சில் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

எம்பிபிஎஸ் மற்றும் அதற்கு மேல் படித்த மருத்துவர்கள், இந்த கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினரான பிறகே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த கவுன்சிலில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை சேர்ந்த மருத்துவர்கள் பதிவு செய்வார்கள். இந்த கவுன்சிலில் 1 லட்சத்து 11 ஆயிரம் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கவுன்சிலுக்கு 7 உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள். அரசு தரப்பில் 3 உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள். இந்த 10 உறுப்பினர்களும் கூடி தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.

‘‘மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை; அரசு மருத்துவராக இருந்தால் அவர்கள் சரியாக அரசு பணிக்கு வரவில்லை; விதிகளை மீறி மருத்துவர்கள் செயல்படுவது உள்ளிட்ட புகார்களை அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மீது பொதுமக்கள் மருத்துவ கவுன்சிலிற்கு நேரடியாக அனுப்பலாம். வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் இந்த கவுன்சிலுக்குதான் அந்த புகாரை அனுப்பும்.

அவற்றை இந்த கவுன்சில் விசாரித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கும். இரண்டாம் கட்டமாக சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு அபராதம் விதிக்கும். மூன்றாவது கட்டமாக அந்த மருத்துவரின் லைசென்ஸை 6 மாதம், ஒரு ஆண்டு, 2 ஆண்டு மற்றும் வாழ்நாள் முழுவதும் கூட ரத்து செய்ய இந்த மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்கள். இந்த கவுன்சில் தேர்தல் கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்தது.

இந் நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் மருத்துவ கவுன்சில் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கவுன்சிலில் பதிவு பெற்று உறுப்பினராக இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் தபால் வாக்குகள் அவர்கள் பதிவு செய்த முகவரிக்கு ஜன.1-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து பிப்ரவரி 12-ம் தேதிக்குள் தபாலில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைப்பார்கள். மறுநாள் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்றே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மருத்துவரும் 7 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் மதுரையை சேர்ந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் ஒரு அணியும், சேலத்தை சேர்ந்த மருத்துவர் பிரகாசம் தலைமையில் ஒரு அணியும், சேலத்தை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறார்கள். சிலர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் மொத்தம் 26 பேர் போட்டியிடுகிறார்கள். உறுப்பினராகப் போட்டியிடுகிறவர்களுக்கு ஆதரவாக அவர்கள் அணித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் வாக்காளர்கள்.

இவர்கள் ஆதரவைப்பெற தேர்தலில் போட்டியிடும் அணிகள் வாட்ஸ் அப், எஸ்எம்எஸ், பேஸ்புக் ஆகிய நவீன தொழில்நுட்பங்களையும், கடிதம் மூலமாகவும் ஆதரவு திரட்டி வருகின்றன. மேலும் அணித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சார கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 82 ஆயிரம் மருத்துவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர். அதில் 13 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். தற்போது கடந்த காலங்களை காட்டிலும் மருத்துவர்களிடம் ஆதரவு திரட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துள்ளன.

மருத்துவர்களிடம் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் விழிப்புணர்வும், கூடுதல் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. அதனால், மருத்துவ கவுன்சில் பதவிகளை கைப்பற்ற அணிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x