Published : 19 Jul 2014 11:51 AM
Last Updated : 19 Jul 2014 11:51 AM
பசுமை குடியிருப்பு கட்டி தருவதாகக் கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பி.சோமசேகர். இவர் சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது:
பத்திரிகைகளில், ‘தேகா பார்ம்ஸ் பொள்ளாச்சி’ (dega farms pollachi) என்ற பெயரில் பசுமை குடியிருப்பு குறித்த ரியல் எஸ்டேட் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, பொள்ளாச்சியில் பசுமை குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தை நிறுவன அதிகாரிகளுடன் சென்று பார்த்தேன். ‘ஒரு சதுர அடி ரூ.250. நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் இந்த விலை. விரைவில் இடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் உயரும்’ என்று நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் 1500 சதுர அடி கொண்ட கட்டிடம் கட்டி கொடுக்க முன்பணம் ரூ.2 லட்சம் செலுத்தினேன். சில நாட்கள் கழித்து இடத்தை நேரில் சென்று பார்த்த போது கட்டிடம் எதுவும் கட்டப்படவில்லை. இதுகுறித்து நிறுவனத்திடம் கேட்டதற்குப் பசுமை குடியிருப்பு திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தனர். பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் தரவில்லை. எனவே, நான் செலுத்திய ரூ.2 லட்சத்தை 18 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம், போக்குவரத்து செலவு ரூ.12 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் சோமசேகர் கூறியிருந்தார்.
இந்த வழக்கைத் தெற்கு நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் பா. ஜெயபாலன், உறுப்பினர்கள் எல். தீனதயாளன், கே.அமலா ஆகி யோர் விசாரித்தனர்.
தீர்ப்பில் கூறியதாவது: தேகா பார்ம்ஸ் அண்டு எக்கோ கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம் நேர்மையற்ற வணிக முறையைக் கடைபிடித்து உள்ளனர். மனுதாரரை நிறுவனம் ஏமாற்றி உள்ளது தெரியவருகிறது. முன்பணம் ரூ.2 லட்சத்தை, நிலம் வாங்கிய 10.10.2008ம் ஆண்டில் இருந்து வைப்பீடு செய்யும் நாள் வரை 15 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.
வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் அளிக்க வேண் டும் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT