Published : 14 Dec 2017 10:20 AM
Last Updated : 14 Dec 2017 10:20 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் தண்ணீரின்றி சுமார் 1 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் காய்ந்து கருகி வருவதால், பாசனத்துக்காக மேட்டூர் அணையை உடனே திறக்க விவசாயிகள் வலியுறுத்திஉள்ளனர்.
காவிரி டெல்டாவில் சம்பா பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த அக்.2-ல் திறக்கப்பட்டது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் அக்.5-ல் கல்லணைக்கு வந்தது. அன்றே கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கினர். அக்டோபர் இறுதி வாரத்தில்தான் வயல்களுக்கு தண்ணீர் பாய்ந்தது. அதன்பின்னர் நாற்றுவிட்டு, நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது ஏறத்தாழ 45 நாட்கள் வயதுடைய பயிர்களாக உள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்ததை அடுத்து நவம்பர் இறுதியில் மேட்டூர் அணை மூடப்பட்டது.
தற்போது கல்லணைக் கால்வாய் பகுதியில் பாசனம் மேற்கொள்ளும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. அதேபோல, வெண்ணாறு மூலம் பாசனம் மேற்கொள்ளும் பள்ளியக்ரஹாரம், குருங்களூர், திட்டை, மெலட்டூர் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சாமி நடராஜன் கூறியதாவது: காவிரி டெல்டாவில் மழை பெய்வதாக பொதுப்பணித் துறையினர் கொடுத்த தகவலை அடுத்து மேட்டூர் அணை நவம்பர் இறுதியில் மூடப்பட்டது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லை. மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.
இளம்பயிராக உள்ள நெற்பயிருக்கு உயிர் தண்ணீர் வேண்டும். தற்போது தண்ணீர் இல்லாமல் நிலங்கள் பாளம் பாளமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. எனவே, காலதாமதம் இல்லாமல் உடனே மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும். தண்ணீரை இப்போது திறந்தால்தான், அந்த தண்ணீர் 5 நாள் கழித்து வயலுக்கு வந்து சேரும். தாமதித்து தண்ணீர் திறந்தால் நெற்பயிர்கள் வாடி வதங்கிவிடும். எனவே, மேட்டூர் அணையை உடனடியாக திறக்க வேண்டும் என்றார்.
கள ஆய்வு செய்யாமல் அறிக்கை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் கூறியதாவது: கல்லணைக் கால்வாய் பாசனத்தை நம்பி 105 நாள் பயிரை விவசாயிகள் நடவு செய்தனர். தற்போது பயிர்கள் சூல் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. ஆனால், தண்ணீர் இல்லாததால் வயல்கள் வெடிப்பு விடத் தொடங்கியுள்ளன.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை தற்போது செலவிட்டு உரமிட்டு பயிர்களை வளர்த்துள்ளனர். ஆனால், பொதுப்பணித் துறையினர் களத்துக்கு வந்து பார்வையிடாமலேயே மழை நீர் அதிகமாக உள்ளதாகக் கூறி மேட்டூர் அணையை மூடிவிட்டனர். எனவே, மேட்டூர் அணையை உடனடியாக திறக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT