Published : 16 Aug 2023 11:30 PM
Last Updated : 16 Aug 2023 11:30 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வல்லவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிறுதானிய இனிப்பு உருண்டையை தியாகிகளுக்கு வழங்கி கவுரவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: விடுதலை போராட்ட வீரர்கள் பல்வேறு துன்பங்களை எல்லாம் அடைந்து, தங்களது உயிரை துச்சமென எண்ணி பாடுபட்டு வாங்கி கொடுத்த சுதந்திரத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாடு பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப, இப்போது நாம் பெரிய வளர்ச்சியை நாட்டில் கண்டுகொண்டிருக்கின்றோம். அந்த வளர்ச்சியின் மூலம் உலகில் தலைசிறந்த நாடாக விளங்குகின்ற நிலையில் நாம் வந்துகொண்டிருக்கின்றோம்.
விரைவில் உலகில் தலைசிறந்த நாடுகள் என்று சொல்லக்கூடிய நிலையில், ஒன்று இரண்டு எண்ணிக்கையிலான இடங்களில் நம்முடைய நாடு நிமிர்ந்து நிற்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அத்தகைய வளர்ச்சியை நாம் இப்போது பெற்றுக்கொண்டிருக்கின்றோம். எல்லோரும் நம்முடைய வளர்ச்சியை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட பெரிய வளர்ச்சி நம்முடைய நாட்டில் வந்து கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்ப புதுச்சேரி மாநில வளர்ச்சியையும் நாம் கொண்டு வந்துகொண்டிருக்கின்றோம்.
கல்வி, மருத்துவம், விவசாய உற்பத்தியை பெருக்குதல், பட்டியலின மக்கள், மீனவ மக்களுக்கு தேவையான உதவிகள் செய்தல், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை வளர்ச்சி அடைவதற்கு கொண்டு வந்த திட்டங்கள் என எல்லா நிலையிலும் நம்முடைய புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக கல்வி, மருத்துவத்தில் யூனியன் பிரதேசத்தில் நாம் முதலிடத்தில் உள்ளோம். அதேபோன்று உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் நம்முடைய அரசானது பல நடவடிக்கைகளை எடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றது.
எப்போதும் நாம் மத்திய அரசை அணுகி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக் கொண்டிருக்கின்றோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கின்றோம்.
நேரடியாக சந்தித்து நாம் மத்திய அரசை கேட்டுள்ளோம், கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல் எம்எல்ஏக்கள், தலைவர்களை அழைத்துச் சென்று மத்திய அரசை அணுகி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் நம்முடைய கோரிக்கையை வலியுறுத்துவோம் என்று சட்டப்பேரவையில் சொல்லியிருக்கின்றேன். இப்போது இங்குள்ள எம்எல்ஏவும் கோரிக்கை வைத்துள்ளார். நிச்சியமாக மத்திய அரசை அணுகி எம்எல்ஏக்கள், தலைவர்களை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறும் கோரிக்கையை வலியுறுத்துவோம்.
மாநில அந்தஸ்து என்பது பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை. அது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவே மாநில அந்தஸ்து என்பதை நாம் நிச்சயமாக பெறுவோம். புதுச்சேரியில் இப்போது 1348 தியாகிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அது ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT