Published : 16 Aug 2023 07:29 PM
Last Updated : 16 Aug 2023 07:29 PM
சென்னை: பரனூர் சுங்கச்சாவடி மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய ஒன்றியத்தில், கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மையால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொல்லெண்ணா துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசு அமைத்துள்ள சாலையில், தனியார் நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலிக்க சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் வருகிறது.
தமிழ்நாட்டில் 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு பொதுமக்களிடம் கொள்ளையடித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் அம்பலப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சுங்கக்கட்டண விதிகளின்படி, நான்கு வழிச்சாலைகள் ஆறுவழிச் சாலைகளாகவோ, எட்டுவழிச் சாலைகளாகவோ தரம் உயர்த்தப்படும் போது, கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 75 விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால், தாம்பரம் - திண்டிவனம் இடையே இரு இடங்களில் நான்குவழிச் சாலையை எட்டுவழிச் சாலையாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் சுங்கக்கட்டணத்தைக் குறைக்காமல் வழக்கமான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்து வருவது கண்டனத்துக்குரியது. பரனூர் சுங்கச்சாவடி மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கான கோடிகள் வசூலிக்கப்பட்டிருக்கும் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இத்தகைய சுங்கக்கட்டணக் கொள்ளையை தடுக்காமல், சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது.
எனவே, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட தமிழ்நாடு உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காலவதியாகியுள்ள 30க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...