Published : 16 Aug 2023 05:28 PM
Last Updated : 16 Aug 2023 05:28 PM
கிருஷ்ணகிரி: நீட் தேர்வு பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
மதுரையில் இம்மாதம் 20-ம் தேதி அதிமுக சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஓசூரில் இருந்து மதுரை மாநாட்டுக்குச் செல்லும் 'தொடர் ஜோதி ஓட்டம்' இன்று காவேரிப்பட்டணத்துக்கு வந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ. கூறியது: ''மதுரை மாநாடு அதிமுகவுக்கு மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் ஒருமுறை ஒரு கருத்தை கூறினால், கடைசி வரை அந்த கருத்தில் உறுதியாக இருப்பார்கள். திருநாவுக்கரசு போன்றவர்கள், பதவி மோகத்தால் அலைகின்றவர்கள். அவருக்கு நிலையான தலைவர் இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த 25 மாதங்கள் கடந்தும், நீட் தேர்வை அவர்களால் ரத்து செய்ய முடியவில்லை. இதில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வில் மத்திய, மாநில அரசு இருவேறு கருத்துகளை கொண்டுள்ளதால் இழுபறி நீடிக்கிறது.
காவிரி ஆணையம் முடிவின்படி, காவிரி நீரை திறந்துவிட வேண்டிய கர்நாடகா அரசின் கடமையாகும். தவறும்பட்சத்தில் அடுத்த நடவடிக்கையாக அரசு செயல்பட வேண்டும். மேலும், காவிரி ஆணையம் உத்தரவின்படி நீரை வழங்கினால் மட்டுமே பெங்களூரில் நடந்த கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தால், உண்மையாகவே தமிழக மக்களுக்கான தலைவராக அவர் உருவாகியிருக்க முடியும். இது சந்தர்ப்பவாத, சுயநலமிக்க கூட்டம்; தங்களது வசதிக்காக, கட்சியும், ஆட்சியும் நடத்திக் கொண்டிருக்கிற கூட்டம். மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக ஆட்சியில்தான் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செல்வாக்கு மிக்க தலைவராக உருவாகிவிட்டார்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT