Published : 16 Aug 2023 03:13 PM
Last Updated : 16 Aug 2023 03:13 PM
வேலூர்: பாலாற்றில் கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த விரிஞ்சிபுரம் தரைப்பாலம் ரூ.30 கோடியில் உயர்மட்ட மேம்பாலமாக கட்டப்படும் என்ற அறிவிப்பு மாதங்கள் உருண்டு இரண்டாவது ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தாண்டும், உயர்மட்டம் மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரலாறு காணாத மழையால் பாலாறு, கவுன்டன்யா, பொன்னை ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் பாலாற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளம் காரணமாக விரிஞ்சிபுரம் அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் கடுமையாக சேதமடைந்தது. இதனால், வட விரிஞ்சிபுரம், கொத்தமங்கலம், கவசம்பட்டு, பில்லாந்திப்பட்டு, முடினாம்பட்டு, விளாச்சூர் உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலூருக்கு சென்றுவர சுமார் 20 கி.மீ தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது.
இதையடுத்து, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக ரூ.20 லட்சத்தில் தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் தரைப் பாலம் சேதம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சுமார் 80 மீட்டர் தொலைவுக்கு முழுவதும் சேதமடைந்தது தெரியவந்தது.
சுமார் 330 மீட்டர் தொலைவு கொண்ட தரைப்பாலத்தின் உயரத்தையும் கடந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதை உயர்மட்ட மேம்பாலமாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இது தொடர்பாக, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேதமடைந்த விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, ரூ.30 கோடி மதிப்பீட்டில் விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதற்கான பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் விரைவு படுத்தப்பட்டது. பாலாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்து அதிலிருந்த கருங்கற்கள் உருண்டுபோனது போல் மாதங்கள் உருண்டு போனாது தான் மிச்சம்.
உயர் மட்ட மேம்பாலம் அறிவிப்பு வெளியாகி 20 மாதங்களாகியும் கட்டுமானப் பணி இன்னமும் தொடங்கப்படவே இல்லை. விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் வருமா? என இரண்டாவது ஆண்டை நோக்கி பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். இந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இந்தாண்டாவது பாலம் கட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆற்றில் சரிந்த வீடுகள்...: பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும், ஆற்றின் மறுகரையில் இருந்த காமராஜபுரம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆற்று வெள்ளத்தில் சரிந்து காணாமல்போனது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடுகள் கட்டி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆற்று வெள்ளம் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
அதனையேற்று சேதமடைந்த தரைப் பாலம் பகுதி வழியாக தண்ணீர் செல்லாமல் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த பணியும் இறுதிகட்டத்தில் இருக்கிறது. இந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் சீரமைக்கப் பட்ட தற்காலிக தரைப் பாலம் பகுதியின் மேல் வெள்ளம் கடந்து செல்லும் என்பதால், அது நிலைத்திருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்தாண்டும் இல்லை...: இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மாநில நெடுஞ்சாலை மேம்பாலங்கள் கட்டுமானப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை பெறுவதற்காக தமிழ்நாட்டில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலங்கள் குறித்த கருத்துருக்கள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், விரிஞ்சிபுரம் பாலாறு உயர்மட்ட பாலமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசின் அரசாணை நிலையில் அந்த கோப்புகள் இருக்கிறது. அரசாணை வெளியானதும் டெண்டர் கோரப்பட்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும். இதற்கே 4 மாதங்களாகும். எனவே, இந்தாண்டு பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எப்படி இருந்தாலும் அடுத்த ஆண்டுதான் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது’’ என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT