Published : 16 Aug 2023 03:18 PM
Last Updated : 16 Aug 2023 03:18 PM

தி.மலை கிரிவல பாதையில் மூடிக்கிடக்கும் கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்

கிரிவல பாதையில் விடுமுறை நாளில் மூடப்பட்டுள்ள கழிப்பறை

திருவண்ணாமலை: பவுர்ணமி நாளை தவிர்த்து பிற நாட்களில் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையங்கள் மூடி கிடப்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

‘மலையே மகேசன்’ என போற்றப்படுகிறது கார்த்திகை தீபத் திருவிழா நாளில் ‘மகா தீபம்’ ஏற்றப்படும் திரு ‘அண்ணாமலை’. 14 கி.மீ., தொலைவு கொண்டது. இம்மலையை சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் உள்ளிட்டோர் வலம் வந்து வழிபட்டுள்ளனர். பவுர்ணமி நாளில் ‘கிரிவலம்’ வருவது கூடுதல் சிறப்பாகும்.

ஆனால், இப்போது பவுர்ணமி நாள் மட்டுமின்றி, பிற நாட்களிலும் கிரிவலம் செல்லும் பக்தர்களை காணமுடிகிறது. இவ்வாறு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு, பவுர்ணமி நாளை தவிர்த்து இதர நாட்களில் அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை நகராட்சி, ஆணாய் பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் ஊராட்சிகள் உள்ளன.

இந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கழிப்பறை கட்டிடம் பராமரிக்கப்படுகிறது. மேலும், சில இடங்களில் குடிநீர் குழாய்களும் உள்ளன. இதேபோல், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும், பவுர்ணமி நாளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. இதர நாட்களில், கழிப்பறைகள் பூட்டி வைத்துள்ளனர். நெடுஞ்சாலைத் துறையின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களும் செயல்படாது.

வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த இரண்டு நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள். இவர்கள் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதால், வனப் பகுதியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வனப் பகுதிக்கு செல்லும் பக்தர்களிடம் வழிப்பறி நடைபெறுகிறது. அவர்களை பின் தொடர்ந்து சென்று, கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் பறிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநில பெண் பக்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற, போலி சாமியாரை மற்ற பக்தர்கள் பிடித்து நையப்புடைந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து கிரிவல பக்தர்கள் கூறும்போது, “அண்ணாமலையாரை வணங்கி 14 கி.மீ., தொலைவு கிரிவலம் செல்கிறோம். எங்களுக்கு கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. பவுர்ணமி நாளில் மட்டும் கழிப்பறை திறக்கப்படும் என கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், பவுர்ணமி நாளில் மட்டுமே கிடைக்கும்.

இதனால், பிற நாட்களில் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று கிரிவலம் செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப் படுகின்றனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களால், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு வருவாய் கிடைக்கிறது.

ஆனால், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுக்கின்றனர். எனவே, பவுர்ணமி, வார விடுமுறை நாள், விடுமுறை நாள் என அனைத்து நாட்களிலும் கழிப்பறைகளை திறந்து வைத்திருக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x