Published : 16 Aug 2023 01:20 PM
Last Updated : 16 Aug 2023 01:20 PM
சென்னை: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி, ஆர்- பிளாக், இளங்கோ தெருவில் கடந்த 8-ம் தேதி சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று, ஜல்லிக்கட்டை மிஞ்சும் வகையில் பள்ளிக் குழந்தையை, தன் தாய் கண் முன்னே தூக்கிவீசியும், முட்டியும் ஆக்ரோஷமாக தாக்கியது. இதன்சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை மாநகரில் நீண்ட காலமாகவே சாலையில் சுற்றித் திரியும் மாடுகளும், அவற்றின் அட்டகாசமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பலமுறை சாலைகளில் ஓடி, இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போதி விபத்தை ஏற்படுத்தியுள்ளன. மாநகராட்சி நிர்வாகமும் அவ்வப்போது மாடுகளை பிடித்தாலும், சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்தவில்லை.
இதற்கிடையில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, கடந்த 2017-ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த, இப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக இருக்கும் தா.கார்த்திகேயன். கடுமையான விதிகளை வகுத்தார்.
அதன்படி, மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு அடையாளமாக காது மடலில் மாநகராட்சி வரிசை எண்கள் அடிப்படையில் முத்திரை வில்லை பொருத்தப்படும். முத்திரை வில்லை பொருத்தப்பட்ட கால்நடைகள் மீண்டும் பிடிக்கப்பட்டால் அவைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும்.
பிடிபட்ட மாட்டின் அபராதத் தொகை ரூ.1250-லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். 3 நாட்கள் பராமரிப்பு செலவு ரூ.300-லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்படும். உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் மாடு பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என விதிகள் வகுக்கப்பட்டன.
இந்த விதிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 3 மாதங்களிலேயே 94 மாடுகளை மாநகராட்சி பிடித்தது. அபராத தொகை அதிகமாக இருந்ததால், மாடுகளில் உரிமையாளர்கள் பலர் தங்கள் மாடுகளை மீட்க முன்வரவில்லை. அவ்வாறு மீட்கப்படாத 22 மாடுகள் புளூ கிராஸிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது கட்டுப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு, மாடுகளின் உரிமையாளர் வாழ்வாதாரம், அவர்கள் வைத்த கோரிக்கை எனக்கூறி, இந்த விதிகளை சத்தமில்லாமல் மாநகராட்சி நிர்வாகம் நீர்த்துப்போகச் செய்தது. அதன்படி, மாடுகளை இனி எத்தனை முறை பிடித்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டு, இனிமேல் மாடுகளை சாலையில் விட மாட்டேன் என பிரமாணப்பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, மாட்டை மீட்டுக்கொள்ளும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன. இதற்கு அரசியல் தலையீடும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
இதன் விளைவாகத்தான் இன்று குழந்தை ஒன்று மாடு முட்டி பாதிக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு மாநகராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆங்காங்கே மாடு பிடிப்போர் மாடுகளை விரட்டி செல்வதும், அவை சாலையில் செல்வோரை அச்சுறுத்தியவாறு ஓடுவதும், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் பேருந்துக்காக சாலையோரம் காத்திருப்போர் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடுவதுமாக உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது: மாடுகளை பிடிப்பது எளிதில்லை. முதலில் உரிமையாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும். பின்னர் மாடுகளை தீவிரமாக பிடிக்க முயன்றால் அவை சாலையில் ஓடி, பல வாகன ஓட்டிகளை முட்டித் தள்ளிவிடுகிறது. அதை பிடித்து வந்து வாகனத்தில் ஏற்ற உடல்பலம் உள்ளவர்கள் இல்லை.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை தான் மாடு பிடிப்பவர்களாக மாநகராட்சி நிர்வாகம் கொடுக்கிறது. மாடு பிடிக்கும்போது அவற்றுக்கு காயம் ஏற்படாத வகையில் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் விலங்குவதை தடுப்பு சட்டம் பாயும். மாடு பிடிப்பதை முறைப்படுத்த வேண்டுமெனில், 2017-ம் ஆண்டு விதிகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் இந்த ஆண்டு 2,809 மாடுகளை பிடித்து, ரூ.51 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 36 சதுரஅடி பரப்பளவு இடம் இருந்தால்தான் மாடுகளை வளர்க்க வேண்டும். தெருவை நம்பி வளர்க்கக் கூடாது. மாடுகள் சாலையில் சுற்றுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக்க இருக்கிறோம்.
பிடிபட்ட மாடுகளை 20 நாட்களுக்கு பராமரித்து பின்னர் உரிமையாளரிடம் கொடுப்பது, இடமில்லாமல் சாலையில் வளர்க்கப்படும் மாடுகளை அப்புறப்படுத்துவது, அபராதம் செலுத்தினால் கால்நடையை மீண்டும் உரிமையாளரிடம் வழங்க வேண்டும் என்ற விதியை திருத்துவது, உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, எச்சரிக்கை விடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT