Published : 16 Aug 2023 05:41 AM
Last Updated : 16 Aug 2023 05:41 AM
நாகர்கோவில்: முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரிக்கு வந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காந்தி நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய பிறகு, களியக்காவிளை சந்திப்பில் இருந்து ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை தொடங்கினார். பேருந்து நிலையம் முன்பு தேசிய கொடி ஏற்றி வைத்து, சமாதான புறாவை பறக்கவிட்டார்.
களியக்காவிளை மற்றும் குழித்துறை சந்திப்பில் அவர் பேசியதாவது: தற்போது அனைத்து தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் படித்து வருகின்றனர்.
நீட் யாருக்கு எதிரானது என்பதை புள்ளி விவரங்களை வெளியிட்டு திமுக விளக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் அறிவுத்திறனை பொறுத்து என்ன படித்தால் மேன்மை பெற முடியும் என்பதை பார்க்க வேண்டும். பெற்றோரின் கனவை குழந்தைகள் மீது திணிப்பது தவறு. வேங்கைவயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர்.
சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். திமுக அமைச்சர்களே பல இடங்களில் சாதி வன்மத்தை கடைபிடிக்கின்றனர். நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் வீட்டில் இருந்து முதல்வர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதிமுக பொன்விழா மாநாடு மிக சிறப்பாக நடக்க எங்களது வாழ்த்துகள். பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கைது செய்தபோது, காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிகோட்டில் கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட 9 பேரை பேருந்தில் உயிரோடு கொளுத்தினார்கள். இன்றைக்கு நாடெல்லாம் பிரிவினைவாதத்தை வளர்த்து கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.
மாலையில் வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை ரவிபுதூர்கடையில் நிறைவு செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம், மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...