Published : 16 Aug 2023 05:54 AM
Last Updated : 16 Aug 2023 05:54 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சுதந்திர தின விழாவில் வளாக இயக்குநர் எம்.எஸ். சுரேஷ் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் அணுவிஜய் நகரியத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு கொண்டதாகும். முதல் மற்றும் 2-வது அணுஉலைகள் மூலம் இதுவரையில் 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2022-2023-ம் ஆண்டில் மட்டும் 14,226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள முதல் அணுஉலை தொடர்ச்சியாக 638 நாட்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பது சாதனையாகும்.
கூடங்குளம் அணுஉலை சார்பாக சுற்றுவட்டாரப் பகுதி மேம்பாட்டுக்காக ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.19.74 கோடி கிராம மற்றும் ஊரக மேம்பாட்டு பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. கிராமங்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக ராதாபுரம் தொகுதியில் உள்ள 193 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.3.86 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம், நவ்வலடி, சங்கனாபுரம், வடக்கன்குளம் ஆகியகிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.1.85 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளில் உள் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டு, பிரதான குளிரூட்டும் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 5 மற்றும் 6-வது அணுஉலைகளின் அடித்தள கட்டமைப்பு பணி நிறைவுபெற்று, மேல்மட்ட அடுக்குக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT