Published : 03 Nov 2017 12:44 PM
Last Updated : 03 Nov 2017 12:44 PM

வெள்ளத்தில் மூழ்கும் சென்னை; மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துக: அன்புமணி

அலட்சியம் காட்டாமல் மீட்புப் பணிகளையும், வெள்ளத்தடுப்பு பணிகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்த பணிகளில் உதவுவதற்காக துணை ராணுவப்படைகளையும், தேசிய பேரிடர் மேலாண்மை படையையும் தமிழகத்திற்கு அழைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடைவிடாமல் பெய்த மழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. மழை பாதிப்புகளும், சேதமும் அதிகரித்துவரும் நிலையில் அதற்கேற்ற வகையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா இடங்களிலும் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னையின் முக்கிய சாலைகள் ஏரிகளாகவும், குளங்களாகவும் மாறி விட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன என்பதிலிருந்தே பெருமழையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும். சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதிகள் வெள்ளம் காரணமாக சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. வட சென்னையிலும் கிட்டத்தட்ட இதேநிலை தான் காணப்படுகிறது. சென்னையின் மையப்பகுதிகளும் மழையின் சீற்றத்திலிருந்து தப்பமுடியவில்லை.

சென்னையில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.  வட சென்னையிலும், மத்திய சென்னையிலும் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்திருப்பதால் பொதுமக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். தென் சென்னையின் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காததால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது அவதியை அதிகரித்துள்ளது.

2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் கடுமையான மழை பெய்துள்ள சூழலில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுத்து விட முடியாது. ஆனால், வெள்ளநீர் கால்வாய்கள் முறையாக தூர் வாரப்பட்டிருந்தால் மழை ஓய்ந்த இரு மணி நேரத்தில் வெள்ள நீர் முழுமையாக வடிந்திருக்கும். ஆனால், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழை ஓய்ந்து பல மணி நேரமாகியும் வெள்ளநீர் வடியவில்லை. 

வெள்ளநீரை வடியச் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.  வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவும், மீட்புப் பணிகளை முடுக்கி விடவும் அதிகாரிகள் எவரும் வரவில்லை என்பதே அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

முதலமைச்சர், அமைச்சர்கள், இ.ஆ.ப. அதிகாரிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை நேற்று இரவு வெள்ளம் காரணமாக மூடப்பட்டது. இரவு முழுவதும் பெய்த மழையில் சுரங்கப்பாதை முற்றிலுமாக மூழ்கி விட்டது. ஆனால், அதிகாலை முதல்  மின்னல் வேகத்தில் வெள்ள நீரை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு காலை 9.00 மணிக்கு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

அந்தப் பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதற்கான அறிகுறியே காணப்படவில்லை. இந்த வேகம் பாராட்டத்தக்கது தான். ஆனால், இதேவேகம் சாதாரண மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் காட்டப்படாதது ஏன்?

வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவதற்காக இ.ஆ.ப. அதிகாரிகளும், அந்தப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில அதிகாரிகள் மட்டுமே அதிகாலையிலிருந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி மண்டலங்களின் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களில் பலர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அதேபோல் பெரும்பாலான அமைச்சர்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதேநிலை நீடித்தால் வெள்ளப் பாதிப்புகளை எத்தனை நாட்களானாலும் சரி செய்ய முடியாது.

வெள்ள பாதிப்புகளை விட அதுகுறித்த வதந்திகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும். அத்தகைய பாதிப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விளம்பரமும், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வழங்கிய விழிப்புணர்வு அறிவுரைகளும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள் ஆகும்.

அமெரிக்காவையும், லண்டனையும் விட மிகச்சிறப்பான முறையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது போன்ற உளறல்களை தவிர்த்து விட்டு மக்களின் பாதிப்புகளை போக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

இலங்கைக்கு அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு இன்னும் அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே அலட்சியம் காட்டாமல் மீட்புப் பணிகளையும், வெள்ளத்தடுப்பு பணிகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்த பணிகளில் உதவுவதற்காக துணை இராணுவப்படைகளையும், தேசிய பேரிடர் மேலாண்மை படையையும் தமிழகத்திற்கு அழைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x