Last Updated : 15 Aug, 2023 10:18 PM

 

Published : 15 Aug 2023 10:18 PM
Last Updated : 15 Aug 2023 10:18 PM

உலக நாடுகளுக்கு இந்தியா விரைவில் தலைமை ஏற்கும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை

புதுச்சேரி: நாடு முழுவதும் 77-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசின் சார்பில் சுதந்திர தினவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரையாற்றி பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்றபோது, பெரும் சவால்களும் பொறுப்புகளும் நம்மை சூழ்ந்திருந்தன. நாடு சுதந்திரம் பெற்று, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறிவிட்டால், நாடு சிதறுண்டு போவதுடன், மக்கள் உள்நாட்டு போரில் மடிவதோடு இந்தியா இருண்ட காலத்துக்கு தள்ளப்படும் என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூறி வந்தனர். அவர்களின் கூற்றையெல்லாம் பொய்யாக்கி உள்ளோம்.

உலக நாடுகள் நம்மை திரும்பி பார்க்கும் நிலையிலிருந்து அண்ணாந்து பார்க்கும் வகையில் நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இன்று பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக நமது நாடும் உள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியா விரைவில் தலைமை ஏற்கும் நிலை வரும்.

2047-ம் ஆண்டில், நம் நாடு சுதந்திரம் பெற்ற நூற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில், முற்றிலும் முன்னேறிய நாடாக இந்தியா இருக்கும். அதற்கு மாநிலங்களின் பங்களிப்பு குறிப்பாக, முன்னேறி வரும் புதுச்சேரி மாநிலத்தின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கும் என்பதை கடந்த இரண்டாண்டுகால ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், செயல் திட்டங்கள் சான்றுகளாக உள்ளன.

பிரதமர் மோடியின் ஆசியோடு, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. முடங்கி கிடந்த திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 2022-23-ம் நிதியாண்டில் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கிய திருத்திய மதிப்பீட்டுத் தொகையான ரூ.11,500 கோடியில் 93.56 விழுக்காடு செலவு செய்யப்பட்டது.

புதுச்சேரி அரசின் 16 துறைகள் மூலம் 90 நலத்திட்டங்களின் பலன்கள் நேரடிப் பயன் பரிமாற்றத்தின்கீழ் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. 98.56 விழுக்காடு பயனாளிகளின் வங்கிக்கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு, பணம் உரிய நபர்களுக்கு நேரடியாகச் சென்றடைகிறது.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் பயிர்க் காப்பீடு திட்ட அமலாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளும் விவசாயிகள் அனைவருக்கும், அவரவர் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையுடன் மானிய தொகையையும் அரசே செலுத்தும். பால் உற்பத்தியை பெருக்கிட நடப்பு நிதியாண்டில் 1,600 கறவை மாடுகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேவைகளை குறைத்து பயன்படுத்தவும் பசுந்தீவனத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கவும் நவீன மண் இல்லா பயிரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 17,083 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையும், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையும் இணைந்து சிறுவர்களுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இருதய சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும்.

கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் நிறுவனத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகம், மருத்துவப் பூங்கா மற்றும் புதுச்சேரி மருத்துவ கவுன்சில் அமைக்க மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் அண்மையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்தபோது திறந்து வைத்தார். எதிர்வரும் காலத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவம் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படும்.

புதுச்சேரியில் ஒரு சித்த மருத்துவ கல்லூரியும், காரைக்காலில் 50 படுக்கைகள் கொண்ட ஒரு ஆயுஷ் மருத்துவமனையும் தேசிய ஆயுஷ் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்படும். தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடி செலவில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் மற்றும் செயலக கட்டிடம் மற்றும் காலாப்பட்டில் ரூ.483 கோடி செலவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகக் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் பாண்டி மெரினா கடற்கரையில் 1 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கட்டமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது. இதன் திட்ட மதிப்பீடு 14.50 கோடியாகும். அந்த நீரைக் குழாய்கள் மூலம் கொண்டு செல்ல ரூ.12.50 கோடி செலவாகிறது. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் மின்சுகாதார கண்காணிப்பு முறை ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு அருகில் ரூ.15 கோடியில் மாநிலங்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளுக்கென தனி பேருந்து நிலையம் இந்த ஆண்டு கட்டப்படும்.

சுற்றுலா மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஈர்க்கும் வகையில் நகரப் பொழுதுபோக்குப் பூங்கா ரூ.5.50 கோடி செலவில் பழைய துறைமுகப் பகுதியில் கட்டப்பட்டு இந்தாண்டே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி நகரப் பகுதியில் ஒட்டுமொத்த பாதாளச் சாக்கடைத் திட்டம் ரூ.50 கோடியில் மறுசீரமைக்கப்படும். வருங்காலங்களில் நாங்கள் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் படிப்படியாக செயல்படுத்துவோம்" இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x