Published : 15 Aug 2023 09:10 PM
Last Updated : 15 Aug 2023 09:10 PM
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நல்லாளுமை விருது, முதல்வர் பதக்கம் ஆகியவற்றை சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், மாவட்ட காவல்துறையின் சார்பில் புராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் தடுப்பு தொடர்பாக இத்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கவும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட இரு நடவடிக்கைகளுக்காக நல்லாளுமை விருது, முதல்வர் பதக்கம் ஆகியவை காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் இன்று (ஆக.15) நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட இரு விருதுகளையும் வழங்க, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ மாவட்ட காவல்துறையின் சார்பில் கடந்தாண்டு புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நடப்பாண்டு, புராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.0 என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. சிறார்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?, தவறான தொடுதல் என்றால் என்ன?, அதனால் பாதிக்கப்பட்டால் யாரிடம் தெரிவிக்க வேண்டும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ளும் முறை உள்ளிட்டவை குறித்து இத்திட்டத்தின் கீழ் காவலர்கள் மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் 1,280 பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 686 மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லாளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் 600 கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கிராம ஊராட்சி தலைவர்கள், பொதுமக்களை ஈடுபடுத்தியதன் விளைவாக மாவட்டத்தில் உள்ள 108 கிராம ஊராட்சிகளில் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT