Published : 15 Aug 2023 04:47 PM
Last Updated : 15 Aug 2023 04:47 PM

காவிரி நீர் விவகாரம் | கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ் (இடது) , சிவக்குமார் (வலது)

சென்னை: "தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதையும், மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிப்பதையும் அமைச்சர் சிவக்குமார் தொடர்புபடுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களைக் காப்பாற்ற தமிழகத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் கூறியிருக்கிறார். இதில் தமிழக மக்களோ, உழவர்களோ மகிழ்ச்சியடைவதற்கு எதுவும் இல்லை. இது உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கர்நாடகம் கடைபிடிக்கும் தந்திரம். இதை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதையும், மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிப்பதையும் அமைச்சர் சிவக்குமார் தொடர்புபடுத்துவது கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரில் இன்று வரை 41 டிஎம்சி பாக்கி வைத்திருக்கிறது. இந்த மாதத்தில் எஞ்சியுள்ள 16 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டிஎம்சி வீதம் 24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாத இறுதி வரை தமிழகத்துக்கு கர்நாடகம் 65 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 10 டிஎம்சி தண்ணீர் வழங்குவதாக கூறுவது எந்த வகையில் நியாயம்?

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையைத் தொடர்ந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுகிறது. நேற்றைய நிலவரப்படி கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து வினாடிக்கு 14,281 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் 8 நாட்களில் 10 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்து விடும். இதைத் தாண்டி வேறு என்ன சலுகையை கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கொடுத்து விட்டார்? அதுமட்டுமின்றி, தமிழகத்தில் குறுவைப் பயிர்களைக் காக்க அடுத்த 50 நாட்களுக்கு குறைந்தது 50 டிஎம்சி தண்ணீர் தேவை. அவ்வாறு இருக்கும்போது 10 டிஎம்சி தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகம் என்ன செய்ய முடியும்?

இவை அனைத்தையும் கடந்து தமிழகம் கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பிச்சையாகக் கேட்கவில்லை, தங்களுக்கான உரிமையைத் தான் கேட்கிறது. தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தீர்மானிக்க முடியாது. தமிழகத்துக்கான தண்ணீரை வழங்க ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திசை திருப்புவதற்காகவே கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மிகவும் நியாயமாக நடந்து கொள்வதைப் போல பேசி வருகிறார். அவரது பேச்சில் தமிழகத்தின் மீதான அக்கறை இல்லை, நயவஞ்சகம் தான் உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும். தமிழகத்துக்கு 50 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், கர்நாடக அணைகளில் 92 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அதனால் உச்சநீதிமன்றம் நல்லத் தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை நாளையே விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x