Published : 15 Aug 2023 03:33 PM
Last Updated : 15 Aug 2023 03:33 PM
மதுரை: மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட மக்கள், வணிகர்கள் பெரிதும் விரும்பி பயணிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 46-வது பிறந்த நாளையொட்டி, மதுரையில் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், ரயில் ஓட்டுநர்களுக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது மதுரை - சென்னை வைகை பகல் நேர விரைவு ரயில். தென் மாவட்ட வணிகர்கள், பொதுமக்களுக்கு இந்த ரயில் பெரிதும் பயனுள்ளதாக தற்போதும் உள்ளது. இந்த ரயில் அறிமுகமான ஆண்டிலேயே மீட்டர்
கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது.
ஆசியாவிலேயே மீட்டர் கேஜ் பாதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் எனும் புகழும் இதற்கு உண்டு. வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணிக்கும் வசதிக்கென ஓட தொடங்கியது. தினமும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு
சென்னையை சென்றடைகிறது. மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடம். சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு கிளம்பி இரவு 9.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்கிறது. இதன் பயண நேரம் 7 மணி 35 நிமிடம்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் 1977 முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் சென்னை - மதுரை, மதுரை- சென்னை மார்க்கமாக தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். ஒரு வழிப் பயண தூரம் என பார்த்தால் 497 கி.மீ. ஆண்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இதுவரை 46 ஆண்டில் தோராயமாக 1 கோடியே 77 லட்சத்தி 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர் கேஜ் பாதையில் ஓடும் ரயிலில் குளிர்சாதன வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது வைகை ரயிலில் தான். இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 46 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், வைகை எக்ஸ்பிரஸ் பயணிகள், வைகை ரயிலை இயக்கும் பைலட்டுகளுக்கு மாலை அணி வித்தும், கேக் வெட்டியும் நேற்று ரயில் நிலையத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுநர் ஒருவர் பேசும்போது, "தற்போது, பல்வேறு நவீன வசதிகளோடு வைகை ரயில் மதுரை- சென்னை இடையே பயணிக்கிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைகை எக்ஸ்பிரஸில் அடுத்தடுத்து இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் மிக நவீனமாக உள்ளன. இந்த ரயிலில் பணிபுரிந்த என்னை போன்ற ஓட்டுநர்கள் பெருமைப் படுகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT