Published : 15 Aug 2023 03:22 PM
Last Updated : 15 Aug 2023 03:22 PM

ஜெயலலிதா தான் எனக்கு நன்றிக்கடன் பட்டவர் - காங். எம்.பி. திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் | கோப்புப்படம்

புதுக்கோட்டை: "ஜெயலலிதாதான் எனக்கு நன்றிக்கடன் பட்டவரே தவிர, நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டவன் கிடையாது. நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். மீண்டும் அவர் முதல்வரனார். அதிமுகவினர் எல்லாம் அமைச்சர்களாகி சவுகரியமாக இருக்கின்றனர்" என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 1989-ல் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்தும், திருநாவுக்கரசர் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வதாக பேசியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "ஜெயக்குமார் எந்த காலத்தில், அதிமுகவில் சேர்ந்தார்? எந்த காலத்தில் அதிமுகவில் இருந்தார்? என்று எனக்கு தெரியவில்லை. எம்ஜிஆரை எல்லாம் அவர் பார்த்திருக்கிறாரா? என்றும் எனக்கு ஞாபகம் இல்லை. அவர் ஜெயலலிதாவிடம் எப்போது வந்து சேர்ந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, ஜெயலலிதாதான் எனக்கு நன்றிக்கடன் பட்டவரே தவிர, நான் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவன் கிடையாது.

நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். நான் காப்பாற்றியதால்தானே மீண்டும் அவர் முதல்வரானார். நான் காப்பாற்றியதால்தானே, இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகி சாப்பிட்டு சவுகரியமாக இருக்கின்றனர். அப்போது ஜெயலலிதா எனக்கு நன்றியாக இருக்கவேண்டுமா? நான் ஜெயலலிதாவுக்கு நன்றியாக இருக்கவேண்டுமா? ஜெயலலிதாவுக்கு நான் நிறைய செய்திருக்கிறேன். ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல்தான் செய்துள்ளார். அதுமுடிந்துபோன விஷயம். அவர் பாவம் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எனக்கும், ஜெயக்குமாருக்குமா பிரச்சினை? எனவே, அதிமுகவினர் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதாதான் என்னிடம் உண்டு உள்ளார். நான் அதிமுகவில் உண்ணவே இல்லை. உண்ணாமல் எப்படி உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய முடியும்?" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x