Last Updated : 22 Nov, 2017 10:00 AM

 

Published : 22 Nov 2017 10:00 AM
Last Updated : 22 Nov 2017 10:00 AM

கட்டுமானப் பணிகள் முடங்கியதால் 10 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவிப்பு: அதிக விலைக்கு அரசே மணல் விற்பதாக குற்றச்சாட்டு

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு மற்றும் தரமான எம்-சாண்ட் கிடைக்காததால் கட்டுமானத் தொழில் மீண்டும் ஸ்தம்பித்துள்ளது. ஆற்று மணலுக்கு மாற்று மணலான எம்-சாண்ட் தரமானதாகக் கிடைக்காததால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை அமைப்பின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:

தமிழகத்தில் தரமான எம்-சாண்ட் கிடைப்பதில்லை. குவாரி துகள்களை அதிகமாகக் கலந்து விற்கின்றனர். அதனால் அதைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் உறுதித்தன்மை அற்றவையாக இருக்கின்றன. எம்-சாண்டை கான்கிரீட் போடுவதற்கும், செங்கல் பதிப்பதற்கும் பயன்படுத்தலாம். ஆனால், கட்டிட பூச்சுக்கும், டைல்ஸுக்கான தளம் போடுவதற்கும் பயன்படுத்த இயலாது.

மணல் தட்டுப்பாடு மற்றும் தரமான எம்-சாண்ட் கிடைக்காததால் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்துள்ளனர். இதுகுறித்து அண்மையில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து மனு அளித்தோம். அதன்பிறகும் எந்த நடவடிக்கை யும் இல்லை என்றார்.

சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறும்போது, “மணல் வாங்கும் போது ஒருகனஅடிக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், எம்-சாண்ட் விலை டன் கணக்கில்தான் விலை நிர்ணயிக்கப்படும். தொழிற்சாலையில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரம் லாரியில் எம்-சாண்ட் எடுத்து வரும்போது அதில் உள்ள தண்ணீர் 50 சதவீதத்திற்கும் மேல் வடிந்துவிடும். அதனால் நகரத்துக்குள் வந்ததும் லாரியில் தண்ணீர் ஊற்றுவதால், எடை அதிகரித்து விலையும் அதி கம் கொடுக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரம் பொறியாளர்கள் எம்-சாண்ட் தரத்தை இலவசமாக பார்த்துச் சொல்கிறார்கள். அவர்களது அலுவலகத்துக்கு சென்று பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறும்போது, "கேரளாவில் எம்-சாண்ட் தொழிற்சாலையில் எம்-சாண்ட தரத்தை ஐஐடி பொறியாளர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து பரிந்துரை அளிக்கின்றனர். அதன்பேரில் அரசு தரப் பரிசோதனை சான்று வழங்குவதால் பொதுமக்கள் எம்-சாண்டை நம்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அதனால்தான் அங்கு எம்-சாண்ட் பயன்பாடு அதிகம்.

அதுபோன்ற தரப் பரிசோதனை முறை தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தினமும் 50 ஆயிரம் லோடு மணல் தேவை. ஆனால், 2 ஆயிரம் லோடு மட்டுமே கிடைக்கிறது. சட்டவிரோதமாக 5 ஆயிரம் லோடு மணல் அள்ளப்படுகிறது. தனியார் மணல் அள்ளியபோது கடந்த ஏப்ரலில் ஒரு லோடு (4 யூனிட்) மணல் ரூ.20 ஆயிரத்துக்கு விற்றது. இப்போது அரசே அள்ளி ஆன்-லைனில் விற்கும்போது ஒரு லோடு (3 யூனிட்) மணல் சென்னையில் ரூ.65 ஆயிரத்துக்கும், நாகர்கோவிலில் ரூ.80 ஆயிரத்துக்கும், கோவையில் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்கிறது. ஆன்-லைன் முறையை அரசு சரியாகப் பயன்படுத்தாததே கார ணம்" என்கிறார் முனிரத்தினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x