Published : 15 Aug 2023 02:35 PM
Last Updated : 15 Aug 2023 02:35 PM
கும்பகோணம்: சுதந்திர தின விழாவையொட்டி, கும்பகோணம் காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தேசிய கொடியேற்றினார்.
கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் சுதந்திர தின விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் சிலை அமைப்பு ஒராண்டு நிறைவு விழா நடைபெற்றது. கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹால் தலைவரும், எம்எல்ஏ-வுமான சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்தார். 8-வது பட்டாலியன் என்சிசி கமாண்டிங் ஆபிசர் கர்னல் எஸ்.சந்திரசேகரன் தேசிய கொடியேற்றினார். தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சேலம் ராமகிருஷ்ண மடத்தின் சதுர்புஜானந்தா சுவாமிகள், சுவாமி பாஸ்கரானந்தா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கும்பகோணம் முதன்மை சார்பு நீதிபதி (ஸ்கீம் ஜட்ஜ்) வி.வெங்கடேசபெருமாள், "சுவாமி விவேகானந்தர் கூறிய, பலம், தைரியம், நினைத்ததை முடிக்கும் வரை ஓயக்கூடாது என்ற மந்திர வார்த்தைகளை நாம் மறக்கக் கூடாது. சுதந்திரத்தைப் பெற்று தந்த சுதந்திர போராளிகளுக்கு இந்த வார்த்தைகளே அடிப்படையாக இருந்தன என்பதற்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஜாதி, மதம், இனம், மொழி கடந்து இந்தியாவில் அனைவரும் கொண்டாடுவது சுதந்திரதின விழாவும்; குடியரசுதின விழாவுமாகும். சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சுதந்திரத்தை எந்த நோக்கத்தோடு பெற்றோமோ, அதன்படி நாம் அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் சமம் என்ற நிலையைப் போல், பொருளாதாரத்திலும் அனைத்து மக்களும் சமநிலை அடைவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அனைவரும் திருவள்ளுவர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உருவத்தை டைப்போகிராபிக் எனும் எழுத்து வடிவத்தில் அவர்களது உருவத்தை வரைந்த பிளஸ் 1 மாணவி யூ.சங்கமித்ராவை பாராட்டி சான்றிதழும், ரூ.10 ஆயிரம் அருட்கொடையாக வழங்கினர். பின்னர் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல், கும்பகோணம் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தேசிய கொடியேற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் க.சரவணனும், காந்தி பூங்காவில் துணை மேயர் சு.ப.தமிழழகனும், சிபிஐ எம்எல் தொழிற் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகி பி.பாக்கியநாதன் தேசிய கொடியேற்றினார். காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். தூய்மைப் பணியாளர் செவ்வரசி தேசிய கொடியேற்றினார்.
அரசு பெண்கள் கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) சு.அகிலா, அரசு ஆண்கள் கல்லூரியில் ஆ.மாதவி ஆகியோர் தேசிய கொடியேற்றினர். கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலத்தில் மேலாண் இயக்குநர் இரா.மோகன் தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 460 பேர்களுக்கு பரிசுகளும், 10-ம் மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் 153 குழந்தைகளுக்கு ரூ. 1.70 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கீழே விழுந்த தேசிய கொடி: முன்னதாக கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, சந்திர சேகரன் தேசிய கொடியேற்ற முயற்சி செய்த போது, திடிரென கொடி கீழே அறுந்து விழுந்தது. பின்னர், மீண்டும் தேசிய கொடியேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment