Published : 15 Aug 2023 12:17 PM
Last Updated : 15 Aug 2023 12:17 PM
சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி இருந்தார். அவரது உரையில் தேசியம் குறித்து பேசி இருந்தார்.
தேசியம் பேசிய முதல்வர்... “பட்டொளி வீசி பறக்கும் மூவர்ணக் கொடிக்கு முதல் வணக்கம். அதன் நிழலில் வாழ்கின்ற நாட்டு மக்கள் அனைவருக்கும் நல் வணக்கம். 77-வது ஆண்டை தொடங்கியுள்ளது இந்திய ஒன்றியத்தின் விடுதலை நாள். இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியாம் செம்மொழி தமிழை தாய்மொழியாக கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் மண்ணின் முதலமைச்சர் ஆன பிறகு, 1967 ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு பெயர் வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழ்நாடு பெயர் வேண்டுமென கேட்டவர் பெரியார்.
இத்தகைய பார் போற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நான் மூன்றாவது ஆண்டாக இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியது பெருமை. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மக்களுக்கு வணக்கங்கள். கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டில் கோட்டையில் கொடி ஏற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வர்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்து மாநில சுயாட்சியை காத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
விடுதலை வீரர்களை போற்றி பாராட்டுவதில் திராவிட முன்னேற்ற கழக அரசு யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மாவீரன் பூலித்தேவருக்கு நினைவு மண்டபம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை, மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு, மகாகவி பாரதியின் இல்லம் அரசு வீடு ஆனது. காமராஜருக்கு மணிமண்டபம், ராஜாஜிக்கு நினைவாலயம், தில்லையாடி வள்ளியம்மைக்கு மணிமண்டபம், வ.உ.சி இழுத்த செக்கு நினைவுச் சின்னமானது, விடுதலை போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம், தியாகிகளுக்கு மணிமண்டபம், விடுதலை பொன்விழா நினைவுச் சின்னம், தியாகி ஈஸ்வரனுக்கு அரங்கம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு சிலை, தியாகி கக்கனுக்கு சிலை, சிப்பாய் கலகத்திற்கு நினைவுத் தூண் என நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய கட்சிதான் திமுக.
மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாக கொண்டவர்கள் நாம். 1962-ம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது நேருவுக்கு துணையாக நின்றவர் அண்ணா. 1971-ம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தானை அச்சுறுத்திய போது இந்திய மாநிலங்கள் எல்லாம் 25 கோடி ரூபாய் நிதி திரட்டி, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் வழங்கின. அதில் தமிழ்நாட்டின் பங்கு என 6 கோடி ரூபாய் வழங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு. 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணையாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாளை மகாகவி நாள் என அறிவித்தோம். இன்றைய திராவிட மாடல் அரசும் நம் நாட்டு தியாகிகளை மதித்து போற்றி வருகிறது. இந்திய விடுதலை 75-ம் ஆண்டு விழாவை பெருவிழாவாக கொண்டாடினோம்.
இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதந்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அவர்களது குடும்ப ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 11,000 ரூபாயாக அது உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு தான் விடுதலை போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. நாட்டுப்பற்றில் நம் தமிழினம் எந்த இனத்துக்கும் சளைத்தது இல்லை. தமிழ்நாட்டில் தான் விடுதலை போராட்டம் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களது கொடியை அகற்றி மூவர்ணக் கொடியை ஜார்ஜ் கோட்டை கொடிக் கம்பத்தில் பறக்க விட்டவர் பாஷ்யம் என்கிற ஆர்யா. இந்தியாவின் விடியலுக்கு வித்திட்ட இந்த கொடி தான் எதிர்கால இந்தியாவை உருவாக்க உள்ள கொடி ஆகும். இந்திய நாட்டில் பல்வேறு இனம், மொழி, நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்கின்றனர். மாநிலத்துக்கு மாநிலம் வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். மூவர்ணக் கொடியை போற்றுவதன் மூலம் நாட்டு மக்களை போற்றுகிறோம்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், அம்பேத்கர், பெரியார் என அனைவரும் விரும்பியது சமத்துவ இந்தியாவை தான் என அவர் தெரிவித்தார். “இந்தியா எல்லைகளால் அல்லாமல் எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும். அத்தகைய அரசை தான் நாங்கள் தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். சமூக நீதி, சமத்துவம், மொழிப்பற்று, இன உரிமை, சுயமரியாதை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் இயங்கும் இயக்கம் தான் திமுக. அந்த அடிப்படையில் தான் நமது ஆட்சியும் அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் பல்துறை வளர்ச்சியை தமிழ்நாடு கண்டு வருகிறது.
அதனடிப்படையில் தான் குடும்ப பாரத்தை சுமந்து வரும் பெண்கள், தங்கள் உழைப்பிற்கு மதிப்பில்லை என்ற எண்ணத்தை மாற்றிடும் வகையில் 1 கோடி மகளிர் மாதந்தோறும் பயனடையும் வகையில் மகத்தான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் இது. இந்த திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்ய புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவிகள் பலன் அடைந்துள்ளனர். நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் முதல் கையெழுத்திட்டது மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரும் உத்தரவு தான். போக்குவரத்து துறை மிகுந்த நஷ்டத்தில் உள்ளது. இந்த சூழலில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டம் மேலும் இழப்பை ஏற்படுத்தும் என சில அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், விடியல் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் விதமாக இது செயல்படுத்தப்படும் என் நான் சொன்னேன். இனி இது ‘விடியல் பயணம்’ என இதற்கு பெயர் சூட்டப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவொரு முன்னோடித் திட்டம். இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. ‘ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம்’ குழந்தைகளின் ஊட்டச்சத்து சார்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 13 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு
மாநிலத்தின் 8 கோடி மக்களும் ஏதாவது ஒருவகையில் பயனடையும் ஆட்சியை நமது அரசு வழங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், பொருளாதாரம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் ஆகியவற்றை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுவதும் பரவல் பெற்றால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது.
சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சம தர்மம், மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய உயர்ந்த கோட்பாடுகளை கொண்ட இந்தியாவை அமைப்பது தான் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர் என்ற பெருமையுடன் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல் வாழ்த்துகள். வாழ்க தமிழ். வளர்க இந்தியா” என முதல்வர் ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.
‘தகைசால் தமிழர்’ விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றார். அப்துல்கலாம் விருது முனைவர் வசந்தாவுக்கு வழங்கப்பட்டது. வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது முத்தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்டது. கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர், தமிழக மின் ஆளுமை முகமைக்கும் தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT