Published : 15 Aug 2023 05:47 AM
Last Updated : 15 Aug 2023 05:47 AM
சென்னை: ‘மாணவர்கள் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்; உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு மையத்தில் பயின்றுவந்த குரோம்பேட்டை மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர்கள் குடும்பத்துக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.
நன்றாகப் படிக்கும் மகன் மருத்துவராவான் என்று பெற்றோர் கருதியுள்ள நேரத்தில், நீட் தேர்வுக்கு பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்தது கொடூர நிகழ்வாகும். எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை மாணவர்கள் எப்போதும் எடுக்க வேண்டாம். உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். அதற்கான சட்ட ரீதியான முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். முதலில் அனுப்பி வைத்தபோது காலம் கடத்தியதுடன், பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். 2-வது முறை அனுப்பினால், ஒப்புதல் தரவேண்டும். ஆனால் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
அந்த மசோதாவைக் கிடப்பில் போட வேண்டும் என்பதுதான் ஆளுநர் ரவியின் மோசமான எண்ணம். தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க முடியாதவர்கள் தோற்றுப்போகின்றனர். 2, 3 ஆண்டுகள் படிக்க பணம் வைத்திருப்பவர்களால் வெற்றி பெற முடிகிறது.
குறைவான மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி என்ற தகுதியைப் பெற்று விட்டவர்களும், பணம் வைத்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்றநிலை உள்ளது. பணம் படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி என்றநிலைமையை உருவாக்கி விட்ட னர்.
அதை மீறி இதில் நுழையும் அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழக அரசால் வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் சேர்பவர்களாக உள்ளனர். ஆனால் இது எதுவும் ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை. புரிந்து கொள்ளவும் மறுக்கிறார். அல்லது பயிற்சி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.
இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். ‘கையெழுத்து போடமாட்டேன்’ என்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
மாணவர்களே உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக் கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். பிறரையும் வாழ வையுங்கள். உயிரைமாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT