Published : 15 Aug 2023 06:17 AM
Last Updated : 15 Aug 2023 06:17 AM

வேத, சம்ஸ்கிருத கல்வி வாரிய பிராந்திய மையம் ராமேசுவரத்தில் தொடங்கப்படும் - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேதங்களுக்கான முறையான கல்வியை வழங்க 1987-ல் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக ‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்’ நிறுவப்பட்டது. இதை அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் தொடங்கி வைத்தார். 1993-ல் இந்த அமைப்பு டெல்லியிலிருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினிக்கு மாற்றப்பட்டது.

இந்த அமைப்பின் முக்கியப் பணி, வேத பாடசாலைகளை உருவாக்குவதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும் ஆகும். தற்போது நாடு முழுவதும் 450 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாணவர்கள் சம்ஸ்கிருதம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் படித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தானின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களுக்கு இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்தது.

இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு நிறைவுச் சான்றிதழ்களை வைத்து உயர் கல்வியில் சேர முடியும். இந்த மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான் அமைப்பு மூலம் வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் வேதக் கல்வியை ஊக்குவிப்பதற்காக வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங்களை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ராமேசுவரம், பத்ரிநாத், துவாரகா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

75 ஆண்டுகளுக்கு முன்புவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரத்துக்கு மாணவர்கள் வந்து குருகுலக் கல்வி மூலம் சம்ஸ்கிருதம் மற்றும் உபநிடதங்களை கற்றனர். 1965-ல் ராமேசுவரத்தில் தொடங்கப்பட்ட தேவஸ்தான பாடசாலையில் சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் இது சில ஆண்டுகளுக்குப் பின்பு மூடப்பட்டது. இந்நிலையில், இங்கு பிராந்திய மையம் அமைவதன் மூலம் மீண்டும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத உபநிடதங்களை மாணவர்கள் கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x