Published : 17 Nov 2017 08:30 PM
Last Updated : 17 Nov 2017 08:30 PM
வடபழனியில் வயதான தம்பதியினர் வசிக்கும் வீட்டு வாசலில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக குப்பைகள் நிரம்பிய குப்பை வண்டியை நிறுத்தி சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் மனரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார் .
வடபழனி, திருநகரில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார் ஓய்வு பெற்ற போக்குவரத்து நடத்துநர் சீனிவாசன் (70). மேல்தளத்தில் வசிக்கும் அவர்கள் கீழ்த்தளப்பகுதியை ரேஷன் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். திருநகர் பகுதியில் இவர்கள் வசிக்கும் பகுதி தாழ்வான பகுதி என்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. மேலும் வீட்டுக்குள் கழிவு நீர் நிரம்பி தெருவிலும் வெளியேறி உள்ளது. இது தொடர்பாக சீனிவாசன் கழிவுநீர் அகற்று வாரியத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனாலும் கழிவுநீர் அகற்றப்படவில்லை. தெருவில் கழிவுநீர் ஓடியதால், சீனிவாசன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் ஜீவன் என்பவர் பிரச்சினை செய்திருக்கிறார். ஜீவன் சென்னை மாநகராட்சியில் 130 வார்டின் சுகாதார அதிகாரி, கடந்த மார்ச் மாதமே, சுகாதார சீர்கேடு என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் மீண்டும் சென்னை முழுவதும் சாலைகளில் வெள்ளநீர் சூழ வழக்கம் போல் சீனிவாசனின் வீட்டிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜீவன் அவர் வசிக்கும் தெருவில் குப்பை அள்ள வரும் ரிக்ஷா வாகனத்தை குப்பை அள்ளும் ஊழியர் ராஜேந்திரன் என்பவரிடம் கூறி குப்பை அள்ளும் வண்டியை குப்பையுடன், சீனிவாசன் வீட்டு வாசலில் மறித்து நிறுத்தக் கூறியுள்ளார்.
ஊழியர் ராஜேந்திரன் அதிகாரி சொல்கிறாரே என்று வேறு வழியில்லாமல் வீட்டு வாசலை மறித்துக் குப்பை வண்டியை அசையாமல் இருக்க மூன்று சக்கரங்களின் கீழும் கல்லை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். காலை 9 மணிக்கு மேல் பக்கத்தில் ரேஷன் கடை திறக்க வந்தவர்கள் வீட்டை மறித்து குப்பை வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து ஊழியர் ராஜேந்திரனை அழைத்து எடுக்கச்சொல்ல அவர் மேல் அதிகாரி உத்தரவின் பேரில் நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஜீவன் நான்தான் நிறுத்தச்சொன்னேன் என்று கூறி குப்பை வண்டியை எடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மூன்று மணி நேரம் வீட்டு வாசல்முன் குப்பை வண்டி குப்பையுடன் நின்றதால் சீனிவாசன் வேறு வழியில்லாமல் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குப்பை வண்டியை அகற்றியுள்ளனர். ஜீவனையும் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
சென்னை நுண்ணறிவுப் பிரிவில் ஆய்வாளராக இருக்கும் கன்னியப்பன் தன் வயதான பெற்றோருக்கு மனரீதியாக ஏற்பட்ட தொல்லை குறித்து சென்னை மாநகராட்சி மண்டல உதவி ஆணையரின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, அவர் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை.
130 வது வார்டு சுகாதார ஆய்வாளர் ஜீவனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பாக நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுக் கேட்டபோது அடுக்கடுக்காக சீனிவாசன் பற்றி குற்றச்சாட்டை வைத்தவர் அதற்கு தண்டனையாக நான்தான் குப்பை வண்டியை அவர் வீட்டு முன் நிறுத்தச் சொன்னேன் என்று தெரிவித்தார். தவறு செய்தார் என்றே வைத்துக்கொண்டாலும், அதிகாரி என்ற முறையில் சீனிவாசன் என்பவர் வீட்டு முன் குப்பை வண்டியை நிறுத்தி மறிக்கும் அதிகாரம் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? மாநகராட்சியில் இப்படி தண்டனை வழங்கலாம் என்று நடைமுறை உள்ளதா? என்று கேட்ட போது, ''மாநகராட்சியில் வரி கட்டாதவர்கள் கடைகள், அலுவலகங்கள் முன்பு இது போன்று குப்பை வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்கள்'' என்று நியாயப்படுத்தினார்.
அப்படி நிறுத்தியதே பிரச்சனையானது தெரியுமா? அப்படி உங்களுக்கு அதிகாரம் ஏதும் வழங்கியிருக்கிறார்களா? நீங்கள் தண்டனை தரவேண்டுமானால் நோட்டீஸ் அளிக்கலாம் அல்லது அபராதம் விதிக்கலாம். வயோதிகர்களிடம் இப்படி நடக்கலாமா? சாக்கடை அடைப்புக்கு அவர்கள் புகார் அளிக்காவிட்டால் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி என்ற முறையில் நீங்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கலாமே. உங்களுக்கு அதிகாரம் உள்ளதே என்று கேட்டபோது தான் செய்தது தவறுதான் என்று தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து 5 வது மண்டல உதவி ஆணையர் நடராஜனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''அதுவா சார், அது ஒன்றுமில்லை விசாரித்துவிட்டேன். குப்பை அள்ளும் ஊழியர் வீட்டு வாசல் முன் நிறுத்திவிட்டு டீ சாப்பிடச் சென்றுவிட்டாராம். அதைப் பெரிதுபடுத்திவிட்டார்கள்'' என்று தெரிவித்தார். டீ சாப்பிட 3 மணி நேரமாகுமா, அதற்காக வீட்டு வாசலை மறித்து குப்பை வண்டியை நிறுத்தி நகராமலிருக்க கல்லை வைத்து விட்டு செல்வார்களா? என்று கேட்டதற்கு, ''ஆமாம் சார் நம்புங்க நான் விசாரித்து விட்டேன்'' என்றார்.
நாங்களும் விசாரித்துவிட்டோம். சற்று முன்தான் 130-வது வார்டு சுகாதார ஆய்வாளர் ஜீவனிடம் பேசினோம், அவர் ''நான்தான் நிறுத்தச் சொன்னேன். தண்டனை கொடுப்பதற்காக அவ்வாறு செய்தேன்'' என்று ஒப்புக்கொள்கிறார். என்று கூறுகிறார், பின்னர் போலீஸார் வந்துதான் குப்பை வண்டியயையே அகற்றி உள்ளனர் இந்த விபரங்கள் தெரியுமா? என்று கேட்டபோது, ''அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT