Published : 06 Jul 2014 11:44 AM
Last Updated : 06 Jul 2014 11:44 AM
மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக கட்டிட நிறுவன உரிமையாளர் உட்பட 3 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தில் மொத்தம் 61 பேர் இறந்துள்ளனர். இந்த கட்டிட விபத்துக்கு காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அந்த கட்டிட நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன், மகன் முத்துகாமாட்சி, பொறியாளர்கள் துளசிலிங்கம், சங்கர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்து அனைவரும் சிறையில் அடைக் கப்பட்டனர்.
இந்நிலையில், கட்டிட நிறு வன உரிமையாளர் மற்றும் 2 பொறியாளர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை வழங்கும்படி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து, அவர்களை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, உரிமையாளர் மனோகரன், பொறியாளர்கள் துளசிலிங்கம், சங்கர் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து போலீஸார் விசராணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் போது, கட்டிடம் எப்படி உருவாக்கப்பட்டது? மூலப் பொருட்களின் தரம், தன்மை உட்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இருவர் முன்ஜாமீன் தள்ளுபடி
மவுலிவாக்கம் கட்டிட விபத்து விவகாரத்தில் கட்டிடத்தின் பொறியாளர் மற்றும் கட்டிட வரைபட அமைப்பாளர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியதில் 61 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் கட்டிட உரிமையாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்டிட பொறியாளர் வெங்கட சுப்ரமணியன் மற்றும் வரைபட அமைப்பாளர் விஜய்மல்கோத்ரா ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதுகுறித்து, மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சம்பத் கூறுகையில், ‘முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமலதா முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதி இருவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT