Published : 08 Jul 2014 11:31 AM
Last Updated : 08 Jul 2014 11:31 AM

சுவர் இடிந்து 11 பேர் பலியான சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

தனியார் நிறுவன சேமிப்புக் கிடங்கின் சுற்றுச் சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்து 11 பேர் பலியான சம்பவத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோழவரம் அருகே உப்பரபாளையம் கிராமத்தில் தனியார் சேமிப்புக் கிடங்குகளின் சுற்றுச் சுவர், மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து குடிசைகள் மீது விழுந்தது.

இதில், அக்குடிசைகளில் தங்கியிருந்த ஆந்திரா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழி லாளர்கள் மற்றும் ஒரு குழந்தை என 11 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற அவர்களின் உறவினர்கள் திங்கள்கிழமை மருத்துவமனைக்கு வந்தார் கள். அதில், உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த அப்பய் யாவின் உறவினர் தெரிவித்த தாவது:

சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆந்திர மாநிலம், காகுளம் மாவட்டம், சிட்டுகுண்டம் கிரா மத்தைச் சேர்ந்த அப்பய்யாவும் ஒருவர்.

இவரும் இவரது சகோதரர் சிம்மையாவும் பிழைப்புக்காக குடும்பத்தோடு தமிழகத்துக்கு வந்தவர்கள். அப்படி வந்த இடத்தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில், அப்பய்யா, சிம்மையா ஆகிய இருவர் மட்டுமல்லாமல், அப்பய்யாவின் மனைவி லெட்சுமி, சிம்மையாவின் மனைவி லெட்சுமி காந்தம்மா, அவர்களின் 3 வயது குழந்தை ஜெகதீஷ் என ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், 12 வயதை தாண்டாத அப்பய்யாவின் மகன், மகள், சிம்மையாவின் மகன் என 3 பேருக்கு ஒரே ஆதரவு அப்பய்யாவின் 65 வயது தந்தை மட்டும்தான். அவரது காலத்துக்கு பிறகு அந்தப் பிள்ளைகளின் நிலை என் னாகுமோ ?

மேலும், அப்பய்யாவின் சகோதரி மகன் ராமு, லெட்சுமி காந்தம்மாவின் சகோதரி ஜெயம்மாள் ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள் ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடல்கள் ஒப்படைப்பு

விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்களைப் பெற ஆந்திர மாநில தொழிலாளர் துறை ஆணையர் ராம ஆஞ்சநேயலு, நாயுடுபேட்டை ஆர்டிஓ ரமணா, ஆந்திர அரசின் கொறடா குனம் ரவிகுமார் மற்றும் ஆந்திரம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த இறந்தவர்களின் உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குவிந்தனர். பிரதே பரிசோதனை முடிந்து முறைப்படி 11 உடல்களும் உறவினர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

உடல்களை எடுத்துச்செல்ல வும், உறவினர்கள் செல்வதற்கும் தமிழக அரசு சார்பில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஆந்திர அரசு பயணச் செலவாக அவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x