Last Updated : 13 Nov, 2017 09:25 AM

 

Published : 13 Nov 2017 09:25 AM
Last Updated : 13 Nov 2017 09:25 AM

டிரைவர், வீட்டு வேலையாள், உதவியாளர்கள் என பினாமி பெயரில் பல ஆயிரம் கோடி சொத்துகள்: வருமானவரி துறை உயர் அதிகாரி தகவல்

சசிகலாவின் உறவினர்கள் தமிழகத்தில் பெரும்பாலும் தங்களது வீட்டு கார் டிரைவர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் என பினாமி பெயர்களிலேயே சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதுசம்பந்தமாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என்று வருமானவரித் துறை உயரதிகாரி கூறினார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’ விடம் வருமானவரித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

‘ஆபரேஷன் கிளீன் மனி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சோதனை தற்போது சென்னை, கோவை, புதுச்சேரி என 37 இடங்களில் நடந்து வருகிறது.

150-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கடந்த 3 நாட்களில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பினாமி சொத்துகளை வெளிக்கொண்டு வருவதுதான் இந்தச் சோதனையின் நோக்கம். சோதனையில், பல ஆயிரம் கோடி பினாமி சொத்துகள் சம்பந்தமாக ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் பெரும்பாலும் இதுபோன்ற சொத்துகள் அனைத்தையும் அவர்களது வீட்டு கார் டிரைவர்கள், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள், நெருங்கிய நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் என பினாமி பெயர்களிலேயே வாங்கிக் குவித்துள்ளனர். இவ்வாறு பினாமி பெயரில் சொத்து வாங்குவது பல காலமாக நடந்துவந்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சொத்துகள் குவித்திருப்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களாக தெரிவிக்காவிட்டால், கறுப்புப் பண சட்டப்படி விசாரணை நடத்தப்படும்.

தேவைப்பட்டால், இந்த விஷயத்தில் அந்நிய வரி மற்றும் வரி ஆய்வுத் துறை (FTTR) அதிகாரிகளின் உதவியோடு விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்களது வங்கிக் கணக்குகள் எதுவும் இதுவரை முடக்கப்படவில்லை. சோதனை முழுவதும் முடிந்த பிறகு, தேவையானால் அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்கு ஆலோசித்து, மிகவும் திட்டமிட்ட பிறகே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x