Published : 13 Nov 2017 02:44 PM
Last Updated : 13 Nov 2017 02:44 PM
பாம்பனில் இயங்கி வரும் கடல் ஓசை சமுதாய வானொலி நிலையம், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு வானொலித் தொகுப்பாளர் பயிற்சி அளித்து வருகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் இந்தியாவில் நவம்பர் 14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல, ஐ.நா சபையால் நவம்பர் 20, சர்வதேச குழந்தைகள் தினமாக கடந்த 71 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் சமுதாய வானொலி நிலையமான கடல் ஓசை 90.4 நவம்பர் 14 குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேசக் குழந்தைகள் தினங்களை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு வானொலித் தொகுப்பாளர் பயிற்சி அளித்து அளித்து வருகிறது.
இது குறித்து நமது செய்தியாளரிடம் கடல் ஓசை சமுதாய வானொலி நிலையத்தின் இயக்குநர் காயத்ரி உஸ்மான் கூறியதாவது:
''உலகிலேயே மீனவர்களுக்காக பிரத்யேக வானொலி நிலையமாக துவங்கப்பட்ட கடல் ஓசை சமுதாய வானொலி நிலையம், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனடையும் வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தருவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
அகில இந்திய வானொலி நிலையங்களில் கூட சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவது தற்போது அரிதாகி வருகிறது. இதனால் நவம்பர் 14 மற்றும் நவம்பர் 20 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெறுமனே குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரிக்காமல் ராமேஸ்வரம் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து வானொலித் தொகுப்பாளர்களாக பயிற்சி அளித்தோம்.
இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தயாரித்த நிகழ்ச்சிகள் நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை, ஒரு வார காலத்திற்கு கடல் ஓசை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும்'' என்றார் காயத்ரி உஸ்மான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT